பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

ஐங்குறுநூறு தெளிவுரை


உள்ளுறை : வெள்ளாங் குருகின் பிள்ளையோவெனக் காணச் சென்ற மடநடை நாரையாளது கானலிடத்தேயே தங்கிவிட்டாற் போல. தானறிந்தாள் ஒருத்தியின் மகளோ வென்று கருதிச்சென்ற தலைவன், அச் சேரியிடத்தேயே மயங்கிக் கிடப்பானாயினான் என்று உள்ளுறுத்துக் கூறுகின்றனள். இதனால், அவன் நம் மீது அன்பற்றான் என்கின்றனள்; உறவும் பழமை என்கின்றனள்.

155. பாவை ஈன்றெனன்!

துறை : பலவழியாலும் வாயில்நேராளாகிய தலைமகள், 'மகப்பேற்றிற்கு உரித்தாகிய காலம் கழிய ஒழுகுகின்றாய்' என நெருங்கிய தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: தோழியும் பலவாறு சொல்லிப் பார்க்கிறாள். தலைவியோ தன் மனம் இசையாதேயே இருக்கின்றாள். முடிவாக மகப்பேற்றிற்கு உரிய காலம் கழிந்து போகும்படியாக, நீதான் பிடிவாதமாக நடக்கின்றாயே' என்று, அவளது மனையறக் கடனைச் சுட்டிக்காட்டித் தலைவனுக்கு இசையுமாறு வேண்டுகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.]

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்

பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யாளே!

தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளை போலுமெனப் பார்க்கச் சென்ற மடநடை நாரையானது, சிறகடித்தபடியே அங்குமிங்கும் அசைதலினாலே. நெருங்கிய நெய்தல்கள் கழியிடத்தே மோதிச் செல்லும் அலைகளோடே சேர்ந்து போகும் துறைவனுக்கு, யான் பைஞ்சாய்ப் பாவையினைப் பெற்றுள்ளேனே!

கருத்து: 'அதுவே எனக்கு இப்போது போதும்' என்றதாம்.

சொற்பொருள்: பதைப்ப - அசைய. ததைந்த - நெருங்கிய. ஓதம் - கடல் அலை. பைஞ்சாய்ப் பாவை - -சிறுமியாயிருந்த போது வைத்தாடிய கோரைப் பாவை.