பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



24

ஐங்குறு நூறு தெளிவுரை


மக்களின் வாழ்வியல் வகையாலும், பிறநிலத்து மாந்தரினும் தனித்தன்மை பெற்றிருந்தது. மழைநோக்கி வாழ்வாராதலால் சிலகாலத்துக் கடின உழைப்பும், விளைவு பெற்றபின்னர் சிலகாலத்தே நெடிய ஒய்வும்பெற்ற வாழ்வினராக மருதமக்கள் விளங்கினர். பெருவளம் உடையாரும், அவர்பால் உழைத்துக் கூலியேற்று உண்பாருமாக, மேற்குடியினரும் கீழ்க்குடியினரும் என்னும் பிரிவும் தோன்றிற்று. இதனால், ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சார்ந்தே, ஒருவரையொருவர்.போற்றியே, ஒருவர்க்கொருவர் உறுதுணை நின்றே வாழ்தலென நிலவிய பழந்தமிழரின் பிறதிணை ஒழுக்க மரபுகளுக்கும் மருதத்தில் இழுக்கம் உண்டாயிற்று. பொன்னும் பொருளும் விரும்பி, அதனைப் பெறுதலை வேட்டுப், பிறருக்கு அடித்தொண்டு செய்வாரும், அவற்றை வழங்கி அத்தொண்டேற்று மனம் களிப்பாருமாக, மக்கள் மனநிலையாலும் பிளவுபட்டனர். மருதத்தின் நிலையானது, சமுதாய வாழ்வியல் ஒழுக்கமானது தன் நெறிமையிலே தளர்வுற்று, ஆடவர்க்கு ஒன்றும் பெண்டிர்க்கு மற்றொன்றுமாகவும், மேற்குடியார்க்கு ஒன்றும் பிறருக்கு வேறொன்றுமாகவும் கருதப்பட்ட நிலையதாயிற்று. ஆகவே, பரத்தைமை ஒழுக்கப் தோன்றிப் பரவியதும் மருதத்தின் கண்ணேதான். பரத்தைமை பழிக்கப் பெற்றாலும், ஒழிக்க வியலினரும் சகித்துப் போகவேண்டிய ஒன்றாகக் கருதிச் சகிக்கப்பட்டதும், மருதத்திணையின் மரபாயிற்று.

ஆகவே, தலைவன் தலைவியரிடையே அத்தகைய பிரிவுக் காலத்தே எழும் மனவுணர்வுகளின் நுட்பமான தன்மைகளையும், அதிலும் உரிமையுடைய தன்னைத் துறந்து, பிற பொருட் பெண்டிர்களோடு காமமே நினைவாகக் கருத்தழிந்து திரியும் தலைவனை வெறுத்தாற்போல ஊடினாலும், குடும்பநலம் கருதிப் பொறுத்து ஏற்று வ்ாழும் தலைவியரின் மனச்செழுமையையும், மருதம் நமக்குக் காட்டுகிறது. நம் உள்ளத்தேயும் அக்காட்சிகள் உணர்வெழுச்சிகளைக் கட்டுப்படுத்தத் தூண்டுகின்ற செவ்வியையும், நாம் மருதச்செய்யுட்களாலே அறிந்து மேற்கொண்டு திருந்தலாம்.