பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

249


நாடி வந்தாயன்றி, நீ கவர்ந்து சென்ற தலைவியின் அழகை மீட்டும் தருதற்குரிய அருளோடு வந்தாயல்லை என்று வாயில் மறுத்ததும் ஆம்.

160. முயங்குமதி பெரும!

துறை: புலந்த காதற்பரத்தை, புலவி தீராது தலைமகன் வாயில் வேண்டி வந்தான் என்றது அறிந்த தலைமகள் வாயில் மறுத்தது.

[து. வி.: காதற்பரத்தை யானவள், புலந்து தலைவனை ஒதுக்கியிருந்தாள். அவன் அவளைத் தனக்கு இசைவிக்கச் செய்தவான முயற்சிகள் பலனளிக்காதுபோகவே அவன், தான் தன் மனைவியிடம் போயினால், அவள் தன்னை முற்றவும் மறப்பானோ என்று அஞ்சித் தனக்கு இசைவாள் என்று கருதினான். ஆகவே, மனைவியை நாடியும் வீட்டிற்கு வருகின்றான். அவன் குறிப்பறிந்த தலைமகள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவர்
பண்டையின் மிகப்பெரிது இனைஇ

முயங்குமதி பெரும! மயங்கினள் பெரிதே!

தெளிவுரை : வெள்ளாங்குருகின் பிள்ளை போலுமென்று நினைத்துக் காணச்சென்ற மடநடை நாரையானது, நொந்து வருந்தியதன் மேலும் மிகுதியாகவும் வருந்தும் துறைக்கு உரியவனே! நின் காதற்பரத்தை நீதான் இங்கே வருவதறிந்து பெரிதும் வருந்தி மயங்கினள். ஆதலின், அவள்பாற் சென்று முன்னையினும் மிகப் பெரிது அன்புகாட்டி, அவளைத் தழுவி இன்புறுத்துவாயாக!

கருத்து: 'நின் காதற் பரத்தையையே சென்று இன்புறுத்துக' என்றதாம்.

சொற்பொருள்: இனைஇ - வருந்தி, முயங்குமதி - தழுவுவாயாக.

விளக்கம் : முன்னும் அவள் ஊடுதலும், நீ அது தீர்த்துக் கூடுதலும் உண்டே! இப்போது அவள் முன்னிலும் மிகப்பெரிதாக வருந்தினள். பெரிதும் மயங்கவும் செய்தனள்.