பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

ஐங்குறுநூறு தெளிவுரை


ஆகவே, அவளைத் தெளிவித்துப் பண்டையினும் பெரிதாக அன்புகாட்டி மகிழ்விப்பாயாக! என்று தலைவி கூறுகின்றனள். அவன் தன்பால் வருதலையே உள்ளம் நாடினும், அவன் பரத்தைமையால் மனம் வெதும்பிக் கூறியது இது.

உள்ளுறை: நாரை நொந்ததன் தலையும் நோய் மிகும் என்றது. நினக்கு வாயிலாகச் சென்றவர்கள் அவள் வருத்தங்கண்டு தாமும் வருந்தி நலிந்தாராய், அவள்பாலே அவளைத் தேற்றுவாராய்த் தங்கி விட்டனர் என்றதாம். இது, வாயிலாகத் சென்றவரும் அவள் ஊடலின் துயரம் நியாயமானதென்று கொண்டு மேலும் வருந்துவாராயினர் என்பதாம்.

நாரையும் குருகும் கடற்புட்களாயினும், இனத்தால் வேறானவை எனினும், உடன்வாழ் உறவினைக் கருதி அன்பு காட்டல்மேற் சென்றது நாரை. எனினும் அது சென்ற அவ்விடத்தே, தன் பழைய உள்ளக்கசிவை விட்டு, வேறுவேறு நிலைகளில் இயங்கலாயிற்று.

இவ்வாறே ஊர்த் தலைவனும் உயர்குடியினனுமாகிய தலைவன், பரத்தையர் மாட்டும் தன் ஊரவர் என்று விழவிற் கலந்து களித்தாடற் பொருட்டுச் சென்றவன், அதனை மறந்து, அவர்பாலே இன்பந்துய்ப்பானாகவும், அவர்க்கு வாரி வழங்கி மனையை மறந்தானாகவும் ஆயினன் என்க. அன்றி, இவ்வாறு கற்பித்து ஊடியதாகவும் நினைக்க.