பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

ஐங்குறுநூறு தெளிவுரை


பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்து நுதலழியச் சாஅய்

நயந்த நெஞ்சம் நோய்ப்பா லஃதே!

தெளிவுரை : பெரிதான கடற்கரை யிடத்ததாகிய சிறுவெண் காக்கையானது, கருமையான கொம்புகளையுடைய புன்னைமரத்திலே தங்கும் துறையினையுடையவன் தலைவன். அவன் பொருட்டாகப் பசலையுற்று, நெற்றியும் அழகழிந்து போக மெலிவுறுதலினாலே, அவனையே விரும்பியதான என் நெஞ்சமும், இப்போது நோய் கொண்டதாயிற்றே!

கருத்து: 'நெஞ்சமும் நம்பிக்கையிழந்து வருத்தமுற்றதே' என்றதாம்.

சொற்பொருள்: பயந்து - பசந்து, கருங்கோட்டுப் புன்னை - கூரிய கொம்புகளையுடைய புன்னை. அழிய - ஒளி குன்றிப் போக. சாஅய் - மெலிவுற்று. நயந்த - அவனே துணையாக விரும்பிக் கொண்ட. நோய் - தளர்வும் கவல்வும்

விளக்கம் : 'நயந்த நெஞ்சமே நோய்ப்பட்டது; ஒளி நெற்றியும் பசலையால் அழகழிந்தது; அவனோ வந்திலன்; யான் வாடி நலனழியாதே என் செய்வேன்?" என்கின்றனள்.

’அவனையே நாடிநாடி நலியும் நெஞ்சின் துயரத்தை எழாதவாறு தடுப்பதற்கு என்னால் இயலவில்லையே?' என்றதாம்.

உள்ளுறை : 'சிறுவெண் காக்கையானது தன் முயற்சியிலே மனங்கொள்ளாததாய்ப் புன்னையின் கருங்கோட்டிடத்தே தங்கும் துறைவன்' என்றது, 'அவனும் தான் செய்தற்குரிய வரைதன் முயற்சியற்றானாய்த் தன் மனைக்கண்ணேயே தங்கி வாளாயிருப்பானாயினான்' என்றதாம்.

162. சொல் பிறவாயினவே!

துறை : இதுவும் மேற்பாட்டின் துறையே.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்து நீர் இருங்கழி இரைதேர்ந் துண்டு
பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்

துறைவன் சொல்லோ பிறவா யினவே.