பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

253



தெளிவுரை : பெரிதான கடற்கரை இடத்ததாகிய சிறுவெண் காக்கையானது நீந்துமளவுக்கு நீர்ப்பெருக்கையுடைய கரிய கழியிடத்தே இரையினைத் தேடி உண்டுவிட்டுப், பூக்கள் மணங்கமழும் கானற்சோலையிடத்தே சென்று தங்குகின்ற துறைவனுடைய சொற்களோ, சொன்னபடியே யல்லாமல் வேறாகிப் போயினவே!

கருத்து: 'சொன்ன சொல்லையும் அவன் மறந்தானே' என்றதாம்.

சொற்பொருள் : நீத்து நீர் - நீந்தும் அளவுக்குப் பெருகிய நீர்; இது சிறிதளவுக்கு ஆழமான நீர்நிலைகளிலுள்ள சிறுமீன்களையே பற்றி உண்ணும் தன்மையது என்றதாம். பொதும்பர் - சோலை. சொல் பிறவாயினது - சொன்னபடி நிகழாமல் பிழை பட்டுப் போயினது.

விளக்கம்: சிறு வெண்காக்கை கழிமீனைத் தேர்ந்துபற்றி உண்டதன் பின்னே, பூக்களின் நறுமணங்கமழும் பொதும்பரிற் சென்று, அந்தப் புலால் நாற்றத்தோடு கூடியதாகவே தங்கியிருக்கும் என்றனர். 'பெருங்கடற்கரையது சிறுவெண் காக்கை. நீத்து நீர் இருங்கழி இரைதேர்ந்துண்டு, பூக்கமழ் பொதும்பிற் சேக்கும் துறைவனொடு எனக் குறுந்தொகையும் இந்த இயல்பை எடுத்துக் கூறும். அதன் இயல்பே, தலைவனிடமும் காணப்படுகின்றது என்றதும் இது. விரைய வரைந்து வந்து முறையாக நின்னை மணப்பேன் என்று கூறியதையும், அதுதான் பொய்த்ததையும் நினைந்து' கலங்கி, இப்படிக் கூறுகின்றனள்.

உள்ளுறை: சிறுவெண் காக்கையானது சிறுமீனையுண்டு விட்டுத் தன் பசி தீர்ந்ததாலே, பூக்கமழ் பொதும்பர்ச் சென்று இனிதே தங்கியிருத்தலேபோலத், தலைவனும் தன் ஆர்வந்தீர நம்மைக் களவின்கண்ணே முயங்கியபின்னே, தன் மனைக்கண் சென்று நம்மை மறந்து மகிழ்வோடு இருப்பானாயினன் என்பதாம்.

துறைவன் சொல்லை வாய்மையெனக் கொண்டு, அவனை ஏற்றனமாகிய நாம், அதன்படி அவன் நடவாமையாலே நலனழிந்தும் உளம் கலங்கியும் வேறுபட்டு வருந்துவேமாயினேம் என்பதுமாம். அதனை மறந்து எப்படி ஆற்றியிருப்பேம் எப்பதும் உணர்த்தினள்.