பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

ஐங்குறுநூறு தெளிவுரை


பருகென வற்புறுத்த செவிலியிடம், தோழி சொல்வதாகக் கொள்க! 'துறைவன் நல்கின் பால் ஆரும்’ என்றது, நீயும் நானும் நல்கின் அருந்தாள் என்றதுமாம்.

உள்ளுறை : 'துறைபடி அம்பி அகமணை, காக்கை ஈனும்' என்றது, அவ்விடத்தே தீங்கு ஏதும் நேராதென்பது சுட்டி, அவ்வளவு நலஞ்சிறந்த துறையெனவும், அவ்வாறே அதற்குரிய தலைவனும் தலைவியை மறவாதே வரைந்து வருவன் என்பதும், இவளும் அவனை மணந்துகூடி அவன் குடிவிளக்கும் புதல்வனைப் பெற்றளித்துப் பெருமையடைவள் என்பதும் உள்ளுறுத்துக் கூறுகின்றனள் தோழி.

மேற்கோள்: "நொதுமலர் வரைவுழி ஆற்றாது பசியட நின்றுழி, 'இதற்குக் காரணம் என்?' என்ற செவிலிக்குத் தோழி கூறியது” என்று காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு. 23).

169. என் செயப் பசக்கும்!

துறை : காதற் பரத்தையைவிட்டு மற்றொருத்தியுடன் ஒழுகா நின்ற தலைமகன், வாயில் வேண்டி விடுத்துழி, வாயில் நேர்தல் வேண்டி நின்கண் பசந்தன காண் என்று முகம்புகு தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

[து. வி.; தலைவனின் வரவை வாயில்கள் வந்து சொல்லுகின்றனர். தலைவி சினந்து நோக்குகின்றாள். தோழியோ மீண்டும் அவள் வாழ்வு மலர்வதற்குத் தலைவனை ஏற்றலே நன்றெனக் கருதுகின்றாள்; அதையும் கூறுகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
பொன்னிணர் ஞாழல் முனையின், பொதியவிழ்
புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத் துணமை யறிந்தும்

என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே!

தெளிவுரை: பெருங் கடற்கரையிடத்ததான சிறுவெண் காக்கையானது, பொன்போலும் பூங்கொததுக்களையுடைய ஞாழலை வெறுத்ததானால், அரும்பவழும் புன்னையது அழகிய பூக்களையுடைய கிளையிடத்தே சென்று தஙகும் துறைவன் தலைவன். அவன் என் நெஞ்சத்து என்றும் உளனாதலை