பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

265


காட்டும் பதிற்றுப்பத்து (88); இங்கோ இரண்டொலியும் இசைந்தெழுந்து இனிமை பரப்புதலைச் சுட்டுகின்றனர்.

172. நானும் துயிலறியேனே!

துறை : "கண் துயில்கின்றிலை; இதற்குக் காரணம் என்?" என்று வினவிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.

[து. வி.: காதலி நினைவால் இரவெல்லாம் துயிலற்றுச் சோர்கின்ற தலைவனைப் பரிவோடு நெருங்கி, 'இதற்குக் காரணம் என்னவோ?' என்று வினவுகின்றான் பாங்கன். அவனுக்குத் தலைமகன் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.]

ஒண்தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே!
வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக்கடல் ஒலித்திரை போல,

இரவி னானும் துயிலறி யேனே!

தெளிவுரை : ஒளி செய்யும் தொடியணிந்த அரிவையாவைளோ என் நெஞ்சினைத் தன்னோடும் கவர்ந்து போயினள். வண்டுகள் ஒலிக்க்கின்ற குளிர்ந்த துறையைக் கொண்ட தொண்டிப் பண்டினத்தின்கண், பரந்த கடலானது ஒலித்தெழுப்புகின்ற அலைகளைப்போல. இரவென்றாலும் துயில்தல் அறியேனாய், யானும் ஓயாத புலம்புதலோடு வருந்தியிருப்பேன்.

கருத்து: 'நெஞ்சிழந்தவன் உறங்குவது எவ்வாறு?' என்றதாம்.

சொற்பொருள்: 'அரிவை' என்றது தன் மனங்கவர் காதலியை. இமிர்தல் - ஒலியோடு பறத்தல். பனி - குளிர்ச்சி. உரவுக்கடல் - பரந்த கடல்; வலிய கடலும் ஆம்.

விளக்கம்: உயர்த்தெழுந்து வரும் கடலலையானது கரையில் மோதியதும் அடங்கித் தளர்ந்து மீள்வதுபோல அவன் நெஞ்சமும் அவளை அடைகின்ற நினைவினாலே பெரிதெழும் மனவெழுச்சியாலும், அவளை அடையவியலாதோ என்னும் கவலையினாலே வருந்திச் சோரும் மனத்தளர்ச்சியாலும், அடுத்தடுத்துத் சொடர்ந்து நலிதலால், அவன் உறங்குதல் என்பதே அறியான் ஆயினன் என்று கொள்ளுக.

'இரவினானும்' என்றது, பகலிற்றான் அவனைக் காண மாட்டேமா என வழிநோக்கி இருந்து வாடுவது இயல்பேனும்,