பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

ஐங்குறுநூறு தெளிவுரை


சொற்பொருள்: நயந்து - விருப்புற்று. மென்மெல இபலி - மெல்லென நடந்து. வந்திசின் - வருவாயாக. பண்பு பல - பலவான எழிற் பண்புகள். கொண்டே - கொண்டனையாய்.

விளக்கம்: 'மென்மெல இயலி' என்றது, மென்மலர்ப் பாதவெழிலை நினைந்து கூறியது; சிலம்பு நகச் சின்மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி' என அகமும் கூறும் - (அகம் 261). தோழியிற் கூட்டம் வேண்டுவான், தலைவிக்கு உறுதுணையாக, பாதுகாவலாக அமைவாள் ஒருத்தியையும் விரும்புகின்றான் என்று கொள்க. அவளுக்கு வழியிடையே ஏதும் இடையூறு நேராதிருத்தல் கருதிக் கூறினதால், அவள் மீது அவன் கொண்டுள்ள காதன்மையும் விளங்கும்.

இனி, 'எமக்கு நயந்து அருளினையாயின், அரிவையோடு வந்திசின்' என்று கொண்டு, 'எமக்கு விருப்புற்று அருளிச் செய்தலான களவுக்கூட்டத்தைத் தருதற்கு நினைந்தனையாயின், இனி நின் தோழியொடும் கூடியே வருக' என்றும் பொருள் கொள்ளலாம்.

கருத்து: அவள் துணையில்லாது தனித்து வருதலை வேண்டாமையே ‘நயந்து' என்றது அவளும் விரும்பிக் கூடிய களவுறவு என்றதாம்.

தோழியின்றித் தனியாகச் செல்லின், பிறர் ஐயுறவு கொண்டு பழித்துப்பேச நேரும் என்று நினைத்து இவ்வாறு கூறியதாகவும் கொள்க.

மேற்கோள்: தோழியுடம்பாட்டினைப் பெற்று களவுறவு மகிழற்கு இளம்பூரணர் இச் செய்யுளைக் காட்டுவர் - (தொல். களவு. 16). இது, பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், நீ வருமிடத்து நின் தோழியோடும் வரவேண்டுமெனத் தலைவிக்குக் கூறியது எனவும் - (தொல். களவு. 11): தோழியுடம் பாடு பெற்று மனமகிழ்தல் எனவும் - (தொல். களவு 11) நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவர்.

176. கூறுமதி தவறே!

துறை : தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழிச் சென்ற தலைமகன், 'இவள் என்னை இவை கோடற்குக் காரணம் என்?' என்று தோழியை வினாவியது.

[து. வி.: தலைமகள் யாதோ எண்ணினளாகித், தலைவனோடு மனம்பொருந்தாதே விலகி ஓதுங்கி நிற்கின்றாள்.