பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

ஐங்குறுநூறு தெளிவுரை


அணிவான் என்க. 'அருந்திறற் கடவுள்' என்றது, நெய்தல் நிலத் தெய்வமான வருணனையே குறிப்பதாகலாம்.

உள்ளுறை: 'நெய்தலும் செருந்தியும் விரவிக் கட்டிய மாலை கமழும் மார்பன்' என்றது, தலைவனின் செல்வச் செழுமையினையும், அழகு வேட்கையையும், மணவிருப்பையும் காட்டி, அவன் இவளை விரும்பி மணப்பவனுமாவான் என்று உறுதிபடக் கூறியதுமாம். அவன் இவளுக்கு ஏற்ற பெருங்குடியினன் என்றதுமாம்.

குறிப்பு : 'மார்பன்' என்று சுட்டிக் கூறியது, அதனைத் தழுவித் தலைவி இன்புற்ற களவுறவை நுட்பமாக உணர்த்தற்காம்.

மேற்கோள்: 'குறி பார்த்தவழி வேலனை முன்னிலையாகக் கூறியது' என இளம்பூரணரும் - (தொல் களவு. 24), அறத்தொடு நிற்றலில் வேலற்குக் கூறியது என நச்சினார்க்கினியரும் - (தொல். களவு. 23) உரைப்பர். இவர்கள் கருத்துப்படி, வெறியாடல் முயற்சி நிகழும்போது, தோழி தாய்க்கு உண்மை உணர்த்தியதாகவும் கொள்ளலாம். நெய்தன் மாந்தரும் முருகனை வேட்டு வழிபட்டதும் இதனால் அறியலாம். திருச்செந்திலே அலைவாய்ப் பெருங்கோயில் தானே!

183. காலை வரினும் களையார்!

துறை : வரைவிடை வைத்துப் பிரிந்துழி, ஆற்றாளாகிய தலைமகள் மாலைக்குச் சொல்லியது.

(து. வி.: தலைவன் வரைந்து வருவதாகச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை முடித்தற் பொருட்டாகத் தலைமகளைப் பிரிந்து இருக்கின்ற காலம். அவனைக் காணாத துயரால் தலைவி மனம் நொந்து மாலைக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாடன் நல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்

காலை வரினும் களைஞரோ இலரே!