பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

ஐங்குறுநூறு தெளிவுரை


கடமையுடையோம் என்று, தன் மேன்மை உரைத்ததும் ஆம். 'மீனுண் குருகும் கானலில் தன் துணையோடு தங்கும்; அதன் காதலன்புகூட நம் தலைவரிடம் காணற்கு இல்லை" என்றதுமாம்.

உள்ளுறை: கழியிடைச் செல்லும் குருகு, அவ்விடத்தேயான அழகிய நெய்தலை விரும்பாது. இழிந்த மீனையே விரும்பி உண்டுவிட்டு, இளங்கானலிலே சென்று தங்கும் என்றனள். இது தலைவனும் தலைவியின் பெருநலனைப் போற்றிக் கொள்ளாதே வெறுத்தானாய், இழிவான பரத்தையரையே விரும்பிச்சென்று நுகர்ந்து களித்தானாய், வேறெங்கோ சென்று தங்குவானுமாயினான் என்பதனை உள்ளுறுத்துக் கூறியதாம்.

185. நரம்பார்த்தன்ன தீங்கிளவியுள்!

துறை : 'ஆய மகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்? என வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது.

[து. வி.: தலைவியைக் களவுறவிலே கூடி மகிழ்ந்தவன், அவளை நீங்காதே சூழ்ந்திருக்கும் ஆயமகளிர் காரணமாக, அவளைத் தனியே அதன்பின் சந்திக்கும் வாய்ப்புப் பெறவியலாத நிலையில், தலைவியின் உயிர்த்தோழியிடம், தனக்கு உதவியாக அமையவேண்டித் தலைவன் இரந்து நிற்கின்றான். அவள், 'நின் மனங்கவர்ந்தாள் எம் கூட்டத்துள்ளாருள் யாவளோ? என்று கேட்க, அவன் அவளுக்குத் தன் காதலியைச் சுட்டிக்காட்டிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

அலங்கிதழ் நெய்தற் கொற்கை முன்றுறை
இலங்குமுத் துறைக்கும் எயிறுகெழு துவர்வாய்
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்

நரம்பார்த் தன்ன தீங்கிள வியளே.

தெளிவுரை : அசையும் இதழ்களைக் கொண்ட நெய்தல்கள் பொருந்திய கொற்கைநகரின் முன்றுறையிடத்தே காணப்படும் முத்தினைப்போன்ற பற்கள்பொருந்திய சிவந்தவாயினளும், அரத்தாலே பிளந்து இயற்றப்பெற்ற அழகான வளைகளை யணிந்துள்ள இளையோளும், யாழின் நரம்பிலே நின்றும் இசை எழுந்தாற்போன்ற இனிமையான பேச்சினை உடையவளுமான அவளே. என் காதற்கு உரியாள் ஆவாள்.