பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

287


கருத்து: 'அவளை அடைவதற்கு எவ்வாறேனும் உதவுக' என்று, இரந்ததாம்.

சொற்பொருள்: அலங்கல் - அசைதல். முன்றுறை - கடல் முகத்து நீர்த்துறை. இலங்கு முத்து - காணப்படும் முத்து; ஒளிவிளங்கும் முத்துமாம்; இது அலைகளாலே கொண்டு கரையிற் போடப்படுவது. துவர்வாய் - சிவந்த வாய்; பவளவாயும் ஆகும்; முத்துப் பற்களைக் கொண்ட பவழத்துண்டு போலும் சிவந்த வாய் என்க. குறுமகள் - இளையோள். நரம்பு - யாழ். நரம்பு கிளவி - பேச்சு.

விளக்கம் : அவள் அழகு நலம் எல்லாம் வியந்து கூறியது, அவளைத் தான் களவிற் கலந்துள்ளமை கூறியதாகும். 'கொற்கை' பாண்டியரின் கடற்றுறைப்பட்டினம்; தாமிரபரணி கடலோடு கலக்குமிடத்தே முன்னாள் இருந்தது. மிகமிகப் பழங்காலத்திலேயே முத்தெடுத்தலுக்குப் புகழ் வாய்ந்தது; பாண்டி இளவரசர்கள் கோநகராக விளங்கியதைச் சிலம்பு 'கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்' என்பதனால் அறியலாம். 'ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை’ என்று நற்றிணையும் காட்டும் - (நற். 23). சொல்லினிமைக்கு யாழிசையினிமையை உவமித்தல் மரபு: இதனை ’வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே’ என்னும் அக நானூற்றாலும் (142) அறியலாம்.

அவள் தன்னை நயப்பதுணர்த்த முறுவல் பெற்றமையும், இதழமுதுண்டமை கா டத் துவர்வாய் வியந்தும், தழுவியது சொல்லக் கைவளை குறித்தும், பழகியமை தோன்றக் குறுமகள் எனச் சுட்டியும், உரையாடி இன்புற்றது புலப்பட நரம்பார்ந்தன்ன தீம்கிளவியள் என்றும், நயம்பொருந்தச் சுட்டியமை காண்க. இதனால், அவளும் தன்மேல் பெருவிருப்பினளே என்பதும் உணர்த்தியதாம்.

186. செல்லாதீர் என்றாள் தாய்!

துறை : பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.

[து. வி.: தலைவனும் தலைவியும் பகற்போதிலே கான்றசோலையிடத்தே தனித்துச் சந்தித்துக் களவின்பம் பெற்று மகிழ்ந்து வருகின்றனர். அதனை நீடிக்க விடாதே.