பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

289


அறிந்து, தாய், அவரோடு தம் மகள் கொள்ளும் உறவைத் தடுப்பதும் இயல்பு.

உள்ளுறை: 'நீராடியதால் நனைந்த கூந்தலை, ஈரம் கெட விரித்துக் கைகளாலே அடித்துப் புலர்த்தும் மகளிரையுடைய துறைவன்' என்றது, அப்படித் தம்மிடத்தேயுள்ள நீர்ப்பசையை நீக்கும் மகளிரே போல, நின்னாற் களவுறவிலே கொளப்பட்ட தலைவிக்கும் குற்றம் ஏதும் நேர்ந்துவிடா வண்ணம், வரைந்து வந்து, அவளை ஊரறிய மணந்துகொண்டு நின்னூர்க்குப் போவாயாக என்றதாம்.

'நீராடிய மகளிர் கூந்தலை உலர்த்தியபடி வருகின்ற துறைவன்' என்றது, அவ்வாறே வரும் இவ்வூர் மகளிரும் பலர் உளராதலின், அவர்மூலம் நும் களவுறவும் வெளிப்பட்டு, ஊர் அலர் எழவும் கூடும் என்றதாம். 'நெய்தல் உறைப்பத் தேர் பல்கால் வரும்' என்றது, ஊர்ப்பெண்டிர் கவலையுறத் தலைவன் அடிக்கடி வருவான்' என்றதுமாம்.

187. மகளிரும் பாவை புனையார்!

துறை : தோழி கையுறை மறுத்தது.

[து. வி.: தலைவன் தலைவிக்குத் தன் அன்பைப் புலப்படுத்தக் கருதி, ஆர்வமுடன் தழையுடை புனைந்து கொணர்ந்து தோழியிடம் தந்து, தலைவிக்குத் தரவும் வேண்டுகின்றான். அவள் அதனை ஏற்க மறுத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

 

நொதும லாளர் கொள்ளா ரிவையே;
எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்;
உடலகம் கொள்வோர் இன்மையின்,

தொடலைக் குற்ற சிலபூ வினரே!

தெளிவுரை : பெருமானே! இவற்றை அயலாரான பிற மகளிரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்களே! எம்முடனே உடன்வந்து கடலாட்டயரும் மகளிரும், நெய்தலே மிகுதியாக இட்டுக்கட்டிய இப் பகைத்தழையினைத் தாம் அணியார் என்பதுமட்டும் அல்ல, தாம் நிறுவி விளையாடும் மணற்பாவைக்

ஐங். --19