பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

293


பொருட்டு நம்மில்லத்தே வந்தனனாக, என் கண்களும், அதனைக் கண்டதனாலே பெரிதும் நல்லழகுற்றனவாயின!.

கருத்து: 'தலைவன் வந்தனன் தளர்வு தீர்வாய்’ என்றதாம்.

சொற்பொருள்: உறைத்தரும் - உதிர்ந்து கிடக்கும். பொன்படு மணி - பொன்னிடைப் பொருத்திய நீலமணி. பொற்ப- அழகுபெற.

விளக்கம் : புன்னை மலரும்காலம் நெய்தற்பாங்கினர் மண விழாக் கொள்ளும் நற்காலமாதலின், அதனைச் சுட்டிக் கூறினளாகவும் கொள்க. புலம்பன் வந்தெனக் கண் நல்லவாயின என்றதால், அதுகாறும் வராமைநோக்கி, வழிநோக்கிச் சோர்ந்து அழகழிந்தன என்றதும் கொள்க.

உள்ளுறை: 'புன்னை நுண்தாது உறைத்தரு நெய்தல் பொன்படு மணியின் தோன்றும்' என்றது. நின் குடிப்பிறப்பு அவனோடு நிகழ்த்துகின்ற இல்லறமாண்பால், மேலும் சிறந்து புகழ்பெற்று விளங்கப் போகின்றது என்று உள்ளுறுத்து வாழ்த்தியதாம்.

புலம்பன் வந்தது கண்டதாலே இனி என் கண்கள் நல்லவாயின; நீயும் நின் துயர்தீர்ந்து களிப்பாய் என்றதாம்.

190. உண்கண் பனி செய்தோள்!

துறை : தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

[து. வி.: தலைவிக்கு வேற்றிடத்தில் மணம் புணர்ப்பது பற்றிப் பெற்றோர் பேச்சு நடத்துதல் அறிந்த தோழி, செவிலித் தாயிடம் தலைவியின் களவொழுக்கம் பற்றிக் கூறி, அவளை அவனுக்கே மணமுடிக்கக் கேட்பதாக அமைந்த செய்யுள் இது.]

தண்ணறும் நெய்தல் தளையவிழ் வான்பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம் புலம்பன் மன்ற - எம்

பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே!

தெளிவுரை : பலவான இதழ்கள்கொண்ட பூப்போலும் மையுண்ட எம் கண்கள் வருந்தி நீர்துளிர்க்கச் செய்தவன் - வெள்ளை நெல்லை அரிகின்ற உழவர்கள், குளிர்ச்சியும் நறுமண