பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

ஐங்குறுநூறு தெளிவுரை


மும் கொண்ட நெய்தலின் கட்டவிழும் பெரிய பூக்களைத், தம் வாள்முனைப்பட்டுச் சிதையாதபடி அயலே ஒதுக்கிவிட்டு, நெற்கதிரை மட்டுமே அறுக்கின்ற, மென்னிலத் தலைவனே ஆவான்.

கருத்து: 'அவனே தலைவியை மணவாட்டியாக அடைதற் குரியவன்' என்றதாம்.

சொற்பொருள்: தளை - பிணி; கட்டு; முகையாக விருக்கும்போது ஒன்றாகப் பிணிபட்டிருந்த இதழ்கள், மலரும்போது கட்டவிழ்ந்து தனித்தனியாக விரிந்து அலர்கின்றதைத் 'தளைபவிழ்' என்பர். இவ்வாறே 'ஐம்புலக்கட்டாற் குவிந்து கிடசுகும் மனம் குருஞானத் தெளிவால் மலர்தலையும்’ தளையவிழ்தல் என்றே சொல்வர். வான்பூ - பெரியபூ மாற்றினர் - ஒதுக்கித் தள்ளினராக, பனி செய்தல் - நீர்வாரத் துயரிழைத்தல்.

விளக்கம்: நெய்தல் கழியிடத்து மட்டுமன்றி, நெய்தல் நிலத்தின் விளைவயல்களிலும் செழித்துப் பூத்துக் கிடக்கும் என்பதும், நெல்வறிவார் அதனைத் தம் கருணையினாலே ஒதுக்கி ஒதுக்கி, நெல்லை மட்டுமே அறுப்பார் என்பதும் கூறினள். தலைவியின் உறுப்பைத் தனதுபோலக் கொண்டு கூறியது இது; இப்படிக் கூறுதலும் உரிமைபற்றி உளவாதலை, 'எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம் அல்லவாயினும் புல்லுவ உளவே' - (தொல், பொருள். 221) என்னும் விதியால் உறுதிப் படுத்துவர். தலைமகள் மெலிவுகண்டு, தெய்வம் அணங்கிற்றெனத் தாயர் வெறியாடற்கு முனையும் போது. தோழி இவ்வாறு வெறிவிலக்கிக் கூறியதாகவும் கொள்ளலாம்.

எம் கண் பனி செய்தோனாயினும், அவனே எமக்கு இனி நலன் செய்வோனும் ஆவன் என்ற கற்புச் செவ்வியும் உணர்த்திக் கூறினளாகக் கொள்க.

உள்ளுறை : நெல்லறிவோர் தமக்குப் பயனாகும் நெல்லை மட்டுமே ஆராய்ந்து, அழகும் தண்மையுமுடைய நெய்தலை ஒதுக்கி விடுவதே போலத், தலைவனும் மனையறத்திற் கேற்ற பண்புநலம் உடையாளாகத் தேர்ந்த தலைவியையே மணக்கும் உறுதி பூண்டவன், பிறபிற அழகு மகளிரை நாடாதே ஒதுக்கியவன் என்பதும் உள்ளுறையா பெறவைத்தனள். இதனால், அன்னையும் அவன அன்புச் செறிவை மதித்து ஏற்பன் என்பதாம்