பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

297


சொற்பொருள் : கோடு செறிந்த வளை - சங்கையறத்துச் செய்யப்பெற்ற செறிவான வளைகள். கழிப்பூ - கழிபிலுள்ள பூ; நீலமும் நெய்தலும். கவின் - அழகு. வரையர மகளிர் - மலையிடத்தே வாழும் தேவமகளிர். நிறையரு நெஞ்சம் - ஒன்றைச் சார்ந்து நிறுத்தல், அரிய உள்ளம்; பலவாகச் சிதறிப்போகும் மனம்.

விளக்கம்: முன்கை, கூந்தல், தழையுடை ஆகியவற்றை வியந்து கூறியதனால், தான் அவளோடும் இயற்கைப்புணர்ச்சி பெற்று மகிழ்ந்ததையும் குறிப்பாற் கூறினான்; மீண்டும் அவளை அடையாது வறிதே அலைந்தேங்கி வருந்துவான், 'அது வரையர மகளிரின் மாயமோ?' என்றும் கூறினான், அவளை அவரினும் சிறந்தாள் என்றும் மயங்கினான். சூரர மகளிரின் பெறற் கரியோள்' என்று அகத்தும் வரும் - (அகம். 162). 'நிறையரு கெஞ்சம் கொண்டு ஒளித்தாள்' என்றது, அவள்பால் சென்ற தன் நெஞ்சம் தன்பால் மீளாவகை தகைத்துத் தன்பாலேயே நிறுத்திக்கொண்டாள் எனப் புலம்பியதாம். இயற்கைப் புணர்ச்சி பெற்றுக் களித்தவன், பின் பிரிந்து ஆயத்தோடு செல்வாளின் பின்னே தன் உளத்தைப் போகவிட்டு, அவளை நினைந்தானாய்ப் புலம்பியது இதுவென்க. இது கேட்கும் பாங்கன், அவளைத் தான் சென்று கண்டு, தலைவனோடு மீளவும் கூட்டுவிக்க முயல்வான் என்பதாம்.

192. வீங்கின வளையே!

துறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள்போலத் தன் மெலிவு நீங்கினமை தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: வரைவை இடைவைத்துப் பிரிந்து போயிருந்த தலைவன் வரைவொடும் வந்தானாகத், தோழி மகிழ்வோடு தலைவியைப் பாராட்டும் பொருட்டுச் செல்கின்றாள். அப்போது தலைவி, தான் பிரிவுக்காலத்தே கொண்ட மெலிவையும், அது தான் இப்போதும் நீங்கியதையும், தோழிக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழங்கப்
பாடிமிழ் பனித்துறை ஓடுகலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன

வீங்கின மாதோ - தோழி, என் வளையே!