பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

ஐங்குறுநூறு தெளிவுரை


தெளிவுரை : தோழி, சங்கினம் கரையிடத்தே போந்து உலவவும், கடலிடத்தே அலைகள் எழுந்து முழங்கவும், ஒலித்தலை யுடைய குளிர்ந்த துறைக்கண்ணே ஓடுதற்குரிய கலங்களை நீரிடத்தே செலுத்தும் துறைவன் பிரிந்தான் என்பதாலே நெகிழ்ந்துபோயின என் கைவளைகள், இதுபோது அவனும் வந்தானாக, கையிற் கிடந்து விங்கினவே! இதனைக் காண்பாயாக!

கருத்து: 'இனி என் நலிவும் தீர்ந்தது' என்றதாம்.

சொற்பொருள்: கோடு - சங்கு. புலம் - கடற்கரைப்பகுதி நிலம். கொட்ப - சுழல. உகைக்கும் - செலுத்தும்.

விளக்கம்: தலைவன் பிரிந்தான் என நீங்கிய வளைகள், அவன் வந்தானென அறியவே செறிவுற்று வீங்கின என்பாள், தன் மகிழ்ச்சியை வளைமேலேற்றிக் கூறினளாம்.

உள்ளுறை : கோடு நொதுமலராகவும், கடல் சுற்றத்தாதாராகவும், துறை அயலாராகவும், கலம் தலைவன் தேராகவும் உள்ளுறுத்து உரைத்ததாகவும் கொள்க. தலைவனின் தேர் வரவால், அயற்பெண்டிரான அவர்தம் ஆரவாரப் போக்கெல்லாம் அடங்கித், தான் மன நிம்மதியுற்றமை நினைந்து இவ்வாறு தலைவி உரைத்தனள் என்க.

193. தந்த வளை நல்லவோ?

துறை: வரையாது வந்தொழுகும் தலைமகன், தலைமகட்கு வளை கொண்டுவந்து கொடுத்துழி, 'பண்டை வளைகளைப் போலாவாய் மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை' எனத் தலைமகள் மெலிவுசொல்லித் தோழி வரைவு கடாயது.

[து. வி. தலைவி வரைந்து மணந்து வாழ்தலையே உளத்தில் மிகவும் விரும்பினாலும், களவுறவின் களிப்பிலேயே தலைவனின் மனஞ்செல்ல, அவன் களவையே நாடி வருகின்றான். அப்படி வருபவன் ஒரு சமயம், சில வளைகளையும் தலைவிக்குத் தன் பரிசாகத் தருகின்றான். அவன் தன்னூர் மீளும்போது இடைமறித்த தோழி, அவனை விரைவில் வரைந்துவரத் தூண்டுவாளாகச் சொல்லியது இது.]

வலம்புரி உழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துறைகெழு கொண்க! நீ தந்த

அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே!