பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

ஐங்குறுநூறு தெளிவுரை


வீட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றைக் கூறி, 'இனித் தலைவி இற்செறிப்படைவாள்: அவளை விரைய வந்து மணந்துகொள்வாயாக’ என்று அறிவுறுத்தியதாக அமைந்த செய்யுள் இது.]

கடற்கோ டறுத்த அரம்போழ் அவ்வளை
ஒண்டொடி மடவரற் கண்டிகும் கொண்க
நன்னுதல் இன்றுமாஅல் செய்தெனக்

கொன்னொன்று கடுத்தனள் அன்னை; அது நிலையே.

தெளிவுரை: கொண்கனே! கடற்சங்கினை அறுத்து அரத்தால் போழ்ந்து செய்யப்பெற்ற அழகான வளைகளையும், ஒளிகொண்ட தொடியினையும் உடையாளான, மடப்பம் பொருந்திய இத் தலைமகளை நன்கு காண்பாயாக. இன்று, இவளின் நல்ல நெற்றியானது ஒளி மழுங்கிற்றாக, அதற்குக் காரணம் யாதேனும் ஒன்று உண்டெனக்கொண்டு அன்னையும் இவளை ஐயுற்றனள். இதுதான் எம் மனைக்கண் இப்போது உள்ள நிலைமையாகும்.

சொற்பொருள்: கோடு - சங்கு. அவ்வளை - அழகிய வளை. நொடி - தோள்வளை; தொட்டுக் கிடப்பது தொடியாயிற்று. மடவரல் - மடப்பம் வருதலையுடையவள்; தலைவி. மாஅல் செய்தல் - கருமை படர்தல். கடுத்தனள் - ஐயுற்றனள். அன்னை - நற்றாய்; செவிலித்தாயும் ஆம்.

விளக்கம்: நுதல் ஒளிகுன்றிக் கறுத்து வேறுபட்டது. தலைவன் இரவின்கண்ணே வந்துபோகும் வழியது கடுமையும் தீமையும் நினைத்து அஞ்சியும், அவன் பிரிவைப் பொறாதே வருந்தியும் உள்ளம் அலைந்து வேறுபட்டதனால் என்க. அதனைக் கண்டதும் அன்னை, இவள் களவுறவு கொண்டாள்போலும் என ஐயுற்றனள். ஆகவே, இனி இற்செறிப்புச் செய்வாள்; இவளை நீ விரைந்துவந்து மணந்துகொள்ளலே, இனி, நீ மேற்கொள்ளத் தக்கது என்கின்றனள் தோழி.

'வளை', 'தொடி' காண்க என்றது. அவை நெகிழ்தல் நோக்கி, இவள் படும் வேதனையைக் காண்க என்பதாம். இவையன்றி, இவள் என்றும் நலனோடு திகழ, மணந்து பிரியாதே கூடி நிலையாக இன்புறுத்தலே நன்று என்பதும் ஆம். மால் செய்தென - புதிய நறுநாற்றத்தால் மயக்கம் செய்தது என்று என்பதும் ஆம். புணர்ச்சி பெற்றார் உடலிலேயிருந்து மாம்பூவின் நறுமணம் கமழும் என்பது கருதிக் கூறியதும் இதுவாம்.