பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

303


கருத்து: 'களவிலே அவளை அடைதல் நின்னால் இயலாது' என்றதாம்.

சொற்பொருள்: கொழும்பல் கூந்தல் - கொழுமையான பலவாகிய கூந்தல். பல கூந்தல் - பலவாக முடிக்கப்படும் கூந்தல். 'கொழுமணிக் கூந்தல்' என்பதும் பாடம். படூஉம் - அகப்படும். சேர்ப்பன் - நெய்தல்நிலத் தலைவன். கோடு - சங்கு. தொடி - தோளணி. மடவரல் - மடப்பம் நிரம்பியவள்..

விளக்கம்: தலைவியின் களவுத்தொடர்பை அறிவாளாயினும், அதனை நீடிக்கவிடுதலை விரும்பாத தோழி, உலகத்தார் வரைந்துவந்து பெண் கொள்ளுமாறுபோல, நீயும் முறைப்படி வந்து பெண்கேட்டுத், தமர் உவந்துதர மணத்தாற் பெறுக என்கின்றனள்.

உள்ளுறை : 'தெண்கழிச் சேயிறாப் படூஉம் சேர்ப்ப' என்றது, அவ்வாறே நீயும் முயன்று வரைந்துவரின் இவளை அடைந்தனையாய்க் களிப்பாய் என்றதாம்.

மேற்கோள்: 'உலகத்தார் மகட்கொள்ளுமாறு கொள்' எனக் கூறுதல், எனக் காட்டுவர் இளம்பூரணர் - (களவு. 24). முன்னுறு புணர்ச்சி அறியாள்போல் கரந்த தோழி உலகத்தாரைப்போல வரைந்துகொள் எனக் கூறித் தலைவனை நீக்கியதெனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (களவு. 23). 'பாங்கி உலகியலுரைத்தல்' என்று நம்பியகப் பொருள் உரைகாரர் கொள்வர் (நம்பி, களவு, 28).

197. நலம் கேழாக நல்குவள்!

துறை : தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் தலைவியது நிலைமை கண்டு சொல்லியது.

[து. வி.: களவுக் கூட்டத்திற்குக் குறித்த இடத்திலே வந்த தலைவி, தலைமகனை அடைந்து மகிழ்தற்குத் தன் நாணமும் அச்சமும் தன்னைத் தடைசெய்ய, செயலற்று நின்ற நிலையைக் கண்டு வியந்த தலைவன், தனக்குள்ளே சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை கதுப்பினள் இறைஞ்சிநின் றோளே
புலம்புகொள் மாலை மறைய

நலங்கே ழாக நல்குவள் எனக்கே!