பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

ஐங்குறுநூறு தெளிவுரை


தலைவனை, யாமும் இங்கே வரக் காண்போம். நீதான் நின்னை ஒப்பனை செய்து கொள்வாயாக!

கருத்து: 'அவனைச் சிறிதுபொழுதில் இங்குக் காண்போம்.' என்றதாம்.

சொற்பொருள்: 'வாலெயிறு - வெண்பற்கள். அமர்நகை - விருப்பூட்டும் இளநகை. இளையர் - இளமகளிர். தளை - முறுக்கு. கானல் - கானற்சோலை. குறுந்துறை - சிறிய துறை. அண்ணல் - தலைவன்.

விளக்கம்: 'குறுந்துறை வினவிநின்ற அண்ணல்' என்றது. முன் களவுக்காலத்தே நிகழ்ந்த அந்த முதற்சந்திப்பின் நிகழ்ச்சியினை நினைவுபடுத்திக் கூறியதாகும். அத்துணை மகளிரிடையேயும், நின் நினைவேயாக, நின்னிடமே வந்து அறியானேபோல வினவிநின்ற காதன்மைமிக்கவன், இடையே மனம் தளர்ந்து புறம்போயினும், மீளவும் நின்னையே நாடி வந்தனன் என்பது குறிப்பு. ஆகவே, அவனைச் சினந்து ஒதுக்காது, மகிழ்ந்து ஏற்று மகிழ்வித்து, இனியும் புறம்போகா வண்ணம் நின்னோடேயே பிணித்துக்கொள்க என்பதாம். நம் மெலிவு கேட்டதனால் ஏற்பட்ட இரக்கத்தால் வாராதே, தன்னுள்ளத்தெழுந்த ஆற்றாமையிலேயே அவன் வருகின்றானாதலின், அவனை இப்போது ஏற்றலே, அவனை என்றும் நீங்காதே நாம் நம்பாற் பிணித்துக்கொள்ளற்கு வழியாகும் என்பதுமாம்.

உள்ளுறை : தளையவிழ் கானலிலே, வளையணி முன்கை வாலெயிற்றமர் நகை இளையராடும் இடத்தே சென்றும், அவருள் யாரிடத்தும் மனம்போக்கி மயங்காதே, நின்னையே நாடுவானாகிக், 'குறுந்துறை யாது?" என்றவனாகிய நெடுந்தோள் அண்ணல் என்றது, என்றும் அவன் நின்பாலேயே மாறாப் பேரன்பினன் என்பதனை. உள்ளுறுத்துக் காட்டிக் கூறியதாம்.

மேற்கோள்: "தலைவன் புணர்ச்சியுண்மை அறிந்து தாழ நின்ற தோழி, தானும் குறையுற்றுத் தலைவிமாட்டுச் செல்லுதற்கண் கூற்று நிகழும்" என, இதனைக் களவுக் காலத்து நிகழ்வாகவே எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர் - (தொல், களவு, 24.).

"பாங்கியிற் கூட்டத்துள் தலைவன் இரந்து பின்நின்றமை கண்டு, தோழி மனம் நெகிழ்ந்து, தான் குறை நேர்ந்து, தலைவி