பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30

ஐங்குறுநூறு தெளிவுரை


கருத்து: தலைமகளோ, 'தன் இல்லறம் செழிக்க அறநெறி காக்கும் அரசன் நன்கு வாழ்தலையும், வயல்கள் பெருக விளைதலையும், வரும் இரவலர் உதவிபெற்று மகிழ்ந்து போதலையுமே' வேண்டினள். யாமோ, 'நின் நட்பு வழிவழி அவள்பாற் சிறப்பதனையே வேண்டினோம்' என்பதாம்.

சொற்பொருள்: நீலம் - கருங்குவளை: மருதத்து நீர் நிலைகளிலே பூப்பது. நெய்தல் - நெய்தல் நிலத்து நீர்நிலைகளிலே பூப்பது. கேண்மை - நட்பு: கேளிராக அமையும் உறவு. வழிவழி - பிறவிதோறும் புதல்வன், அவன் புதல்வன் எனத் தொடர்ந்து குடிபெருகி வழிவழிச் சிறத்தலைக் குறிப்பதும் ஆம்; 'வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம்' என மதுரைக்காஞ்சியிலே குறித்தாற்போன்று (194), நாள்தோறும் சிறக்க எனப் பொருள் கொள்வதும்பொருந்தும்.

விளக்கம் : வயல் விளைக என்றது விருந்தாற்றுதற்கும், இரவலர் வருக என்றது எளியோரைப் பேணுவதற்கும் மனங்கொண்ட அறக்கடமை உணர்வே மேலோங்கி, தலைவியிடம் நின்றதெனக் காட்டுவதாம். தோழியரோ, அவள்தன் இன்ப நலமும் வழிவழிச் செழிப்பதன்பொருட்டு வேண்டினர்; அவர்கள் கேண்மை வழிவழி சிறப்பதனையும் விரும்புகின்றனர். பிறவிதோறும் நீங்கள் இப்படியே தலைவன் தலைவியராகி இன்புற்று மகிழ்க என்பது தோழியர் வேண்டுதற் கருத்தாகும்.

உள்ளுறை: மருதத்திற்கு உரிமையோடு கூடிய நீலத்துக்கு நிகராக, உரிமையற்ற நெய்தலும் செழித்து மலர்ந்திருக்கும் ஊரன் என்றது, உரிமையாட்டியான தலைவிக்கு நிகராக உரிமையற்ற பரத்தையையும் ஒப்பக்கருதி விரும்பித் திரியும் தலைவனின் இழுக்கத்தைச் சுட்டிக் காட்டுதற்கு.

3. பால் பல ஊறுக.

துறை : இதுவும் மேற்சொல்லிய துறையினதே.

’வாழி ஆதன்; வாழி அவினி!
பால்பல ஊறுக; பகடு பல சிறக்க!
என வேட்டோளே’ யாயே; யாமே,
'வித்திய உழவர் நெல்லொடு பெயரும்
பூக்கஞல் ஊரன் தன்மனை

வாழ்க்கை பொலிக' என வேட்டேமே!