பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

41


தன்னூர்க்கு அழைத்துச் சென்று, மனையறம் பேணுவானாக' என வேண்டினேம்.

கருத்து: தலைவியோ நாட்டு வளமையினையே விரும்பி வேண்டினள்; யாமோ, அவளது மனையற வாழ்வு விரைவிற் கைகூடுவதனையே விரும்பினோம்.

சொற்பொருள்: மாரி - மழை: பருவமழையும் ஆம். புலால் அம் சிறுமீன் - புலால் நாற்றத்தையுடைய சிறுமீன். வளம் - நாட்டின் வளம்.

விளக்கம் : 'பூத்த மாமரங்களையும் புலால்நாறும் மீன் களையும் உடைய ஊரன்' என்றனள். 'அவ்வாறே தலைவியை உடன் அழைத்துப் போதலால் அலர் எழுமேனும், அவர்கள் உடனுறை மணவாழ்வால் கற்பறம் நிலைபெறும்' என்று சுட்டிக் கூறியதாம் என்றும் கொள்ளலாம். அப்போது உடன் போக்கினை நிகழ்விக்கத் தோழி தலைவனிடம் வற்புறுத்தியதும் ஆகும்.

குறிப்பு : 'ஆதன்' என்பதற்கு அனைத்தும் ஆதலை நிகழ்வித்த பேரருளாளன் எனப் பொருள் கொண்டு. 'வாழி ஆதன்' என்பதனை இறைவாழ்த்தாகவும், 'வாழி அவினி' என்பதனை அரச வாழ்த்தாகவும் கொள்ளலும் பொருந்தும். தன்னலம் மறந்து கற்புக்கடனே நினையும் பழந்தமிழ்நாட்டுத் தலைவியின் சால்பையும், அவள் நலனையே விரும்பி வேட்கும் தோழியரின் அன்புள்ளத்தையும் இதனாற் காணலாம்.

மேலும், தலை மகன் நாடு காவற் பொறுப்புடையவன் என்பதும், அவனைக் காதலித்த தலைவியும் அதற்கேற்ப அவன் தலைவியாகும் நிலைபலே நாட்டின் நலனையே வேட்பாளாயினள் என்பதும், பொருளாகப் பொருந்துவதாம்.

கடமை மறந்து காமத்தால் அறிவிழக்கும் தளர்ச்சி ஆடவர்தம் இழுக்குடைமையாக மட்டுமே விளங்கிற்று; பெண்டிரோ, தன்னை மணந்தானையன்றிப் பிறரைக் கனவினும் நினையாக் கற்பினராகவும், அவன் கொடுமையைப் பொறுத்து மீளவரும்போது ஏற்றுப் பேணும் கடமையுணர்வினராகவும் அன்றும் விளங்கினர் என்பதையும் இங்கே நினைக்கவேண்டும்.