பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

47


என்று கொள்க. கூடாமுன்பு அவன் கூட்டம் வாய்ப்பதனைக் குறித்து நினைந்து ஏங்கியும், கூடிய பின்னர் அடுத்துத் தொடரும் அவன் பிரிவைக் கருதியும், அவர் துயிலறியாரா யிருப்பர் எனக் கொள்க.

விளக்கம்: 'பரியுடை நன்மான் பொங்குளை' என்றது, அக் குதிரை ஓடுங்காலத்தே,தலையணியான உளையானது மேலெழுந்து அசைந்தாடுவதைக் குறிக்கவாம். அவ்வாறே, வேழத்தின் வெண்பூக்களும் காற்றிலே அசைந்தாடியபடி தோன்றும். இதுபற்றியே 'பகரும்' என்றனர். 'ஊரன் பெண்டிர்' என்றது, அவனுக்கே உரியவரான காதற்பரத்தை, உரிமைப்பரத்தை போன்றாரை என்பதும் பொருந்தும்.

உள்ளுறை: 'வேழத்தின் வெண்பூவானது பரியுடை நன்மானின உளைபோலத் தோற்றும் அடைகரை' என்றனர்; அவ்வாறே பரத்தையரும் தலைவனுக்குக் குலமகளிர் போலவே நலமுடையவராகக் காணப்படுவர் என்பதாம்.

மேற்கோள்: 'இஃது ஊடல் நிமித்தம்' என்பர் நச்சினார்க் கினியர் (தொல். அகத்: 14).

14. பனித்துயில் செய்யும் !

துறை : தலைமகள் புணர்ச்சிவேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த தோழி, ’அவன் கொடுமை நினையாது, அவன் மார்பை நினைந்து ஆற்றாய் ஆகின்றது என்னை?' என்றாள். அவட்கு, அவன் கொடியனே ஆயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து; அதனாற் காண்' எனச் சொல்லியது.

[து. வி அவன் கொடுமையறிந்திருந்தும் தலைவிக்கு அவனிடத்தே மனம்போக, அதுகுறித்துத் தோழி வினவுகின்றாள். அவட்குத் தலைமகள், தன் மனநிலையை இவ்வாறு புலப்படுத்துகின்றாள். 'நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்' என்றாற்போல்வது இது.]

கொடிப்பூ வேழம் தீண்டி, அயல
வடிக்கொள் மா அத்து வண்தளிர் நுடங்கும்.
அணித்துறை ஊரன் மார்பே

பனித்துயில் செய்யும் இன்சா யற்றே!