பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



48

ஐங்குறுநூறு தெளிவுரை


தெளிவுரை : வேழத்தின் நீண்ட வெண்பூவானது தீண்டு தலாலே, வடுக்கள் கொண்ட மாமரத்தின் வளவிய தளிர்கள் அசையும் அழகிய நீர்த்துறையினையுடையவன் தலைவன். அவன் மார்பானது. குளிர்ந்த துயிலினைச் செய்யும் இனிய சாயலையும் உடையதாகுமே!

கருத்து: அதுபற்றியே என் உள்ளமும் அதனை நாடிச் சென்றது என்பதாம்.

சொற்பொருள்: கொடி - ஒழுங்கு; நீட்சி. வடி - வடு- பிஞ்சு. வண்தளிர் - வளவிய தளிர். நுடங்கும் - அசையும். அணித்துறை - அழகிய துறை: 'மணித்துறை’ பாடமாயின் நீலமணி போல் தெளிந்த நீர்கொண்ட துறையெனக் கொள்க. பனி - குளிர்ச்சி. சாயல் - அழகு; மெனமை.

விளக்கம்: வேழம் தீண்ட வளவிய மாந்தளிர் அசைதல் போல, தலைவன் பொருட்கொடையால் அணுகப் பரத்தையரும் அவனுக்கு இசைந்தாராகும் தளர்ந்த இயல்பினராவர் என்று கூறியதாகக் கொள்க. பனித்துயில் - குளிர்ச்சியான துயில்; கூடியினபுற்ற களிப்பிலே, அவன் மார்பே பாயலாகக் கொண்டு அயர்ந்து கிடந்து துயில்ல; இன்சாயல் - சாயல் காட்சிக்கும் கருத்துக்கும் இனிமை தருவது என்பதும் ஆம்.

உள்ளுறை : வேழப்பூத் தீண்டலால் வடிக்கொள் மாஅத்து வண்தளிர் அசைதல்போல, அவன் மார்பைப் பரத்தையர் தீண்டலால், அவன் அவர்பாலே செல்லும் மனத்தனாகத் தலைவியின் உள்ளம் மெலிவுற்று ஆற்றாமை கொண்டது என்பதாம்.

மேற்கோள்: தோழியிடத்துத் தலைவனைத் தலைவி உவந்து கூறியது என்பர் நச்சினார்க்கினியர் (தொல், கற்பு. 6).

15. ஊரன் அல்லன் !

துறை : சேணிடைப் பிரிந்துவந்து உடன் உறைகின்றனன் தலைவன்; அவனுக்குப் புறததொழுக்கம் உளதாகின்றது என்று குறிப்பினால் உணர்ந்து தலைமகள் வேறுபட்டாளாக, தோழி அதனை அறியாது, அவன் உடனுறைபவும் வேறுபடுகின்றது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது.

[து. வி. : ’அவன் உடனுறையும்போதும், பரத்தையர் உறவை நாடுகின்ற மனத்தனாகவே உள்ளனன்’ என்று