பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதம்

51


அஞ்சனச்சிமிழாக வேழத்தின் திரண்ட தண்டினை ஏற்றபடி, அறுத்துப் பயன்படுத்துவர். பூக்கஞல் ஊரன் - பூக்கள் மலிந்துள்ள ஊரன். பொன் - பொன்னிறப் பசலை.

விளக்கம் : 'சிறு தொழு மகளிரே தம் கண்ணழகினைப் பேணுதற்கான அஞ்சனத்தை வேழத்தண்டுச் சிமிழிலிட்டுப் பேணிவைக்கும்போதிலே, பூப்போல் உண்கண்ணுடையாளான தலைவியோ, நின்னை நினைந்து நினைந்து தன் கண்கள் பொன் போர்த்த நிலையினளாயினள்; இத்தகு கொடுமை செய்தவன் இனி வந்து அருள்புரிந்துதான் பயன் என்னையோ?' என்பதாம். கண் 'பொன்போற் பசத்தலே', 'உண்கட்கு மெல்லாம் பெரும் பொன் உண்டு' எனவும், 'பொன்னெனப் பசந்த கண்' எனவும் வரும் கலித்தொகை யடிகளாலும் காணலாம் (கலி. 64, 77).

உள்ளுறை : வேழத்தண்டு சிறுதொழு மகளிரின் கண்ணழகு கெடாமைக்கான அஞ்சனச் சிமிழாகப் பயன் படுதலே போலத், தலைவனும், பரத்தையரின் அழகு கெடாதவாறு உடனுறைந்து இன்புறுத்தி அவரைக் களிப்பிப்பான் ஆயினன் என்பதாம். தனக்குரிய அவனைப் பிரிந்து, தன் கண்ணழகினையும் இழந்தாள் தலைவி, இனி அவனால் அவளைப் பண்டுபோல் அழகுண்டாக்க இயலாது; ஆகவே, அவன் வரவை இனி விரும்போம் என்பதாம்; அதனாற் பயனேதுமில்லை என்றதுமாம்.

17. நெஞ்சு வறிதாகின்றது !

துறை : தலைமகன் புரத்தையிற் பிரிந்தவழி, ’இவ்வாறு ஒழுகுதலும் ஆடவர்க்கு இயல்பு அன்றே; நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது என்னை?’ என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

[து.வி.: 'ஆடவரின் இயல்பே இவ்வாறு தலைவியரைப் பிரிவாலே வருந்தி வாடச்செய்து, பரத்தையரின் மயக்கிலே கட்டுண்டு திரிவதுதானே! இதற்காக, நீயும் நொந்து நெஞ்சழியலாமோ?’ என்று சொல்லித் தேற்ற முயலுகின்றாள் தோழி. அவட்குத் தலைவன் சொல்வது இது.]

புதல்மிடை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு குருகின் தோன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்,

வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே.