பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. களவன் பத்து

'களவன்' என்பது நண்டு. இது ஒரு மருதநிலக் கருப்பொருள்; இப் பத்துப் பாடல்களினும்,'களவன்' பற்றிய செய்தி பயின்று வருவதால், இது 'களவன் பத்து' எனப்பெற்றது. 'களவன்' 'கள்வன்' எனவும், 'அலவன்' எனவும் வழங்கும். தமிழ்த் தொகை நூல்களில் நண்டினைப் பலரும் நயமுடன் எடுத்துக்காட்டி உவமித்துள்ளனர். அச்சமுடைய தாயினும், இறுகப்பற்றினால், பற்றிய பற்றை எதனாலும் சோரவிடாத வன்மையும் இதற்கு உண்டு என்பர்.

21. கண் பசப்பது ஏனோ?

துறை : 'புறத்து ஒழுக்கம் எனக்கு இனியில்லை' என்று தலைமகன் தெளிப்பவும், 'அஃது உளது' என்று வேறுபடும் தலைமகட்குத், தோழி சொல்லியது.

[து.வி.: தான் பரத்தமையைக் கைவிட்டு விட்டதாக உறுதி கூறித், தலைவியைத் தெளிவிக்கின்றான் தலைவன். நம்பாதவளாக. அவளோ, அவன் கூறிய உறுதிமொழியை அஃது அவன்பால் உளது என்றே சொல்லி, அவனோடும் மீண்டும் புலந்து வேறுபடுகின்றாள். அவட்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்
தண்துறை யூரன் தெளிப்பவும்

உண்கண் பசப்பது எவன்கொல்? அன்னாய்!

தெளிவுரை: "அன்னையே! முள்ளிச் செடிகள் உயரமாகப் படர்ந்துள்ளதும், பழைய நீரினைக் கொண்டதுமான அடைக்கரைக் கண்ணே. புள்ளிகளையுடைய நண்டானது. ஆம்பலின் தண்டினை ஊடுபுகுந்து அறுக்கின்ற, குளிர்ந்த நீர்த்துறையமைந்த ஊருக்குரியவன் தலைவன். அவன் உறுதிகூறித் தெளிவிக்கவும் தெளியாதே, நின் மையுண்ட கண்கள் இவ்வாறாகப் பசந்து வேறுபடுவதுதான் எதனாலோ?