பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

67


தலைவன். அவன் பொருட்டாக, நீதான், நின் ஒளிவளைகள் நெகிழ்ந்தோட, மெலிந்து துயரப்படுவதுதான் எதற்காகவோ?'

கருத்து: 'அவனைக் குறித்துப் பிழைபட நினைத்து மனம் கவலை கொள்ளாதே! அவன் விரைந்து வந்து சேர்வான்!' என்பதாம்.

சொற்பொருள்: செந்நெல் - சிவப்பு நெல், 'செஞ்சம்பா' என்பதும், 'செஞ்சாலி' என்பதும் இது. செறு - வயல். தண்ணக - குளிர்ந்த உள்ளிடத்தையுடைய எல்வளை - ஒளி செய்யும் வளை. சாஅய் - மெலிந்து.

உள்ளுறை: அலவன் செந்நெற்கதிர் கொண்டு தன் மண்ணளை புகுமாறு போலத், தலைவனும் வினையாற்றுதலால் தேடிய பொருளைக் கொண்டானாய்த் தன் இல்லத்திற்கு விரைந்து மீள்வானாவன் என்பதாம். கற்புக்காலத்தே பொருள்வயிற் பிரிந்து சென்று, திரும்பி வரக் குறித்த காலம் தாழ்த்தானைக் குறித்துச் சொல்லியது இதுவாகக் கொள்க.

மேற்கோள்: "புறத் தொழுக்கத்தை உடையவனாகிய தலைவன்மாட்டு மனம் வேறுபட்ட தலைவியைப், 'புறத்து ஒழுக்கமின்றி நின்மேல் அவர் அன்புடையர்' என, அவ்வேறுபாடு நீங்கத் தோழி நெருங்கிக் கூறியது; இதன் உள்ளுறையாற் பொருள் உணர்க" என்பார் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு. 9). 'கதிர் ... செல்லும் ஊரன்' என்பதற்கு உள்ளுறைப் பொருளாவது, வேண்டிய பொருளைத் தொகுத்துக்கொண்டு இல்லிற்கு வருவான் என்பது' எனவும் அவர் கூறுவர்.

28. தோள் பசப்பது ஏனோ?

துறை : இற் செறிவித்துத் தலைமகட்கு எய்திய வேறுபாடு கண்டு, 'இது தெய்வத்தினான் ஆயிற்று' என்று தமர் வெறி எடுப்புழி, அதனை விலக்கக் கருதிய தோழி, செவிலிக்கு அறத்தொடு நிற்றது.

[து. வி.: இது துறையமைதியால் 'குறிஞ்சி’த் திணையது எனினும், 'களவன் வரிக்கும்' எனவந்த கருப்பொருளால் 'மருதம்" ஆயிற்று. 'வெறிவிலக்கல்' என்னும் குறிக்கோளோடு, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்று, தலைவியின் களவுறவை உணர்த்தியதாகவும் கொள்க.]