பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



72

ஐங்குறுநூறு தெளிவுரை


ஆயத்தாரும் அறியும்படி, நம் தலைவன் செய்த சூளுரையினைப் போற்றிக் காத்தல், தனக்குரிய கடனன்று என்று அவன் இப்போது சொல்வானோ?"

கருத்து: 'அச் சூளுரை பொய்த்து, அவன் பரத்தையரோடும் கூடிப் புதுப்புனலர்ட்டு அயர்தல் உடையன் என்று' நாம் கேட்கின்றோமே என்பதாம்.

சொற்பொருள்: 'அம்ம' என்பது கேட்பிக்கும் பொருட்கண் வந்த இடைச்சொல்: சங்கநூற்களுள் பலவிடங்களிற் காணப்படும்; 'அம்ம கேட்பிக்கும்' (தொல். சொல். 276). மகிழ்நன் - தலைவன் ; மருதநிலத் தலைவனின் பெயர்: பெயரே மகிழ்வே குறியாகத் திரியும் இயல்பை உணர்த்துவது காணலாம்; முடம் - வளைவு; பெருந்துறை - பெரிதான நீர்த்துறை; வையையின் திருமருத முள்துறைபோல்வது. உழையர் - பக்கம் இருப்பார். கடன் - கடப்பாடு; போற்றியே ஆகவேண்டிய தான உறுதிப்பாடு. உடனாடு ஆயம் - தோழியரும், தன்னுடன் நீராட்டயர்தற்கு உரிமையுடையவருமான ஆய மகளிர்.

விளக்கம் : உழையர் கேட்பக் கூறியது, அவர்தாம் அவனுக்கு உணர்த்தித் தெளிவித்தலும் கூடும் என்னும் கருத்தால். 'சூள்' தெய்வத்தை முன்னிறுத்திக் கூறும் உறுதி மொழியாதலின், அங்ஙனம் கூறினான். பொய்ப்பின் தெய்வம் அவனைப்பற்றி வருத்துதல் தவறாதாகலின், தன்னை மறப்பினும், அதனையேனும் நினைந்து போற்றானோ எனக் கவலையுற்றுச் சொல்லுகின்றாள் எனவும் கொள்ளலாம்.

மேற்கோள்: 'அம்ம' என்னும் சொல் கேட்பித்தற் பொருளில் வரும் என்பதற்கு மேற்கோள் காட்டுவர் (தொல். இடை. 29) உரையாசிரியர்கள்.


32. எழுநாள் அழுப என்ப!

துறை : வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: தலைமகள், தன் புறத்தொழுக்கத்தாலே தன்னோடும் ஊடிச் சினந்திருப்பதனை எண்ணி, அவளைத் தெளிவித்துத் தன்னுடன் உறவாடச் செய்யும்பொருட்டுத், தலைவன், தன் பாணர் பாங்கர் முதலியோரை ஏவுகின்றான். அவர்கள் கேட்டுத் திரும்புமாரு தலைவி, தோழிக்குச் சொன்னாற்போல் அமைந்த செய்யுள் இது]