பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



84

ஐங்குறுநூறு தெளிவுரை


"தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு வெண்பூம் பொய்கைத்து அவனூர் என்ப" என்றாற்போலத் தலைவன் கொடுமையும், தலைவி பேதைமையும் உடனுவமம் கொள்ள நிற்கும்" என்பர் நச்சினார்க்கினியர். அவர் கருத்தும் தோழிகூற்று என்பது இதனால் காணப்படும் (தொல். பொ. 230 உரை). தலைவியான குலமகள் இத்தகைய உயிரியல்புகள் எல்லாம் கண்டறியும் அளவுக்கு வெளிப்போந்து செல்லும் மரபினள் ஆகாள் என்னும் உயர்நிலை கருதியே, இருபெரு உரையாசிரியர்களும் இவ்வாறு தோழி கூற்றாகக் கூறினர் எனலாம்.

42. சிறப்ப மயங்கினள் போலும்?

துறை : தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை, 'தலைவன் பிற பரத்தையருடன் ஒழுகினான்' என்று புலந்தாளாக, அதனை அறிந்த தலைவி, அவன் தன் இல்லத்துப் புகுந்துழி, தான் அறிந்தமை தோன்றச் சொல்லியது.

[து. வி.: பரத்தையுறவிலேயே களித்திருந்தானாகிய தலைவன், ஒரு நாள் தலைவியின் நினைவு மேல் எழுந்ததாக, தன் வீட்டிற்கும் வருகின்றான். அவளிடம், 'தன்னைப் பரத்தையர் உறவுடையவனாக நினைப்பதே தவறு எனவும், வேறு வேறு செயல் நிமித்தமாகவே தன் வருகை இடையீடு படலாயிற்று எனவும் பலப்பல பொய்கூறி அவளைத் தெளிவித்து, அவளுடன் மகிழ முயல்கின்றான். அப்போது அவள். அவனைக் குறித்துத் தான் கேட்டறிந்த நம்பும்படியான செய்தியொன்றைக் கூறி, அவனுக்கு இசைய மறுப்பதாக அமைந்த செய்யுள் இது.]

மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாணர் ஊர!- நின் மாண்இழை அரிவை?
காவிரி மலிர்நிறை அன்னநின்

மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே!

தெளிவுரை : “புது வருவாயினை உடைய ஊரனே! நினக்கு உரியவளும், மாண்பமைந்த அணிகள் பூண்டோளுமான அரிவையானவள். காவிரிப் பேராற்றின் நீர்ப்பெருக்குப்போல விளங்கும் நின் மார்பினை மிகுதியாக விலக்கத் தொடங்கினாளே! அவள் கள்ளுண்டதன் களிப்பானது மென்மேலும் பெருகியதனாலே அப்படி மயக்கங் கொண்டனள் போலும்?'

கருத்து: அவள் குடிமயக்கால் நின்னை விலக்கியிருப்பாள், தெளிந்ததும் நின்னைத் தேடுவாள் என்பதாம்.