பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

89


நினக்கே யன்றஃது எமக்குமார் இனிதே -
நின் மார்பு நயந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை யாகி

ஈண்டு நீ யருளாது ஆண்டுறை தல்லே.

தெளிவுரை : நின் மார்பினைத் தழுவியின்புறுதலை விரும்பியவளான, நல்ல நெற்றியையுடையவளுமான அரிவையானவள் விரும்பிய குறிப்பின்படியே நீயும் நடப்பவனாகி, இவ்விடத்திற்கு எம்மிடத்தேயும் வந்தருளுதலைக் கைவிட்டு, அவள் வீடான அங்கேயே நீ நிலையாகத் தங்கிவிடுதல், நினக்கு மட்டும் இனிதாவதன்று; அதுவே எமக்கும் இனிதாவதாகும் என்பதாம்.

கருத்து: பரத்தை குறிப்பிற்கேற்ப நடந்துகொண்டு, அவள் நினைவாகவே மயங்கியிருக்கும் நீ, இங்கு இடையிடையே ராதிருத்தலே எமக்கு இனிது என்பதாம்.

சொற்பொருள்: நயந்த - விரும்பிய. அரிவை - பரத்தையைக் குறிக்கும். நன்னுதல் என்றது, அவள் இளமையெழில் சுட்டுதற்கு; எள்ளற் சுட்டாகவே கொள்க. 'ஆண்டு' என்றது அவள் வீடாகிய அவ்விடத்தேயே என்றற்கு.

விளக்கம்: தொல்காப்பிய உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுமாறு போலத் தலைவி சொன்னதாகவே பொருள் கொள்ளலும் பொருந்தும். 'எமக்குமார் இனிது' என்றது. எமக்குப் பிரிவுத்துயரம் பழகிப் போனது; அதனால், யாம் வருந்துதல் இலம்; ஆனால், இங்கு நீதான் வந்து போவதற்கு அவள் வருந்தி நின்னை விலக்கின்,நீதான் அதனைப் பொறுக்க மாட்டாய். அதனுடன் அவள் நுதலழகும் கெடும் என்பதாம்.

மேற்கோள்: "பிறள் மாட்டுத் தங்கிய ஒழுக்கத்துக் கிழவனைத் தாழ்ந்து, 'எங்கையர்க்கு உரை' என வேண்டிக்கோடற் கண்ணும் தலைவிக்குக் கூற்று நிகழும்" என, இளம்பூரணனார் காட்டுவர் (தொல். கற்பு. 6).

"பரத்தையர் மாட்டு ஒழுகிக் கொடுமைசெய்த தலைவன், தலைவி அடிமேல் வீழ்ந்து வணங்குழி, 'எங்கையர் காணின் இது நன்றெனக் கொள்ளார்' எனக் குறிப்பால் இகழ்ந்து கூறிக், காதலமைந்து மாறிய மாறுபட்டின்கண், தலைவிக்குக்கூற்று நிகழும் என்று நச்சினார்க்கினியர் காட்டுவர் (தொல். கற்பு. 6).