பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



92

ஐங்குறுநூறு தெளிவுரை


[து. வி. பரத்தையரின் உறவிலேயே சிலகாலம் மயங்கிக் கிடந்த தலைவன், ஒரு நாள் தன் மனையிடத்தேயும் செல்ல, அப்போது அவனுக்குத் தலைமகள் புலந்து கூறுகின்ற பாங்கில் அமைந்த செய்யுள் இது.]

வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர/
வேண்டேம் பெரும! - நின் பரத்தை

ஆண்டுச்செய் குறியோடு ஈண்டு நீ வரலே.

தெளிவுரை : வலைவீசி மீன்பிடிக்கின்ற தொழிலிலே வல்லவனான பாண்மகனின், வெண்மையான பற்களையுடைய இளையமகள், வரால் மீனைக் கொணர்ந்து சொரிந்த வட்டியினுள்ளே, வீட்டுத் தலைவியானவள், ஆண்டுகழிந்த பழைய வெண்ணெல்லை நிறைத்து விடுக்கும் ஊருக்கு உரியோனே! நின் பரத்தையானவள் அவ்விடத்தே செய்த புணர்குறிகளோடே நீதான் இவ்விடத்துக்கு வருதலை, யாம் வேண்டுவோம் அல்லேம்!

கருத்து: 'அவளிடமே நீ மீண்டும் செல்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : வலைவல் - வலைவீசிச் செய்யும் மீன்பிடி தொழிலிலே வல்லவனான; பாண்மகன் - பாணன். இதனால் நெய்தல் நிலத்துப் பரதவரேபோல. மருதநிலத்து நீர்நிலைகளிலே மீன்பிடித்து விற்கும் தொழிலினர் பாணர் குடியினர் என்பதும் காணப்படும். யாண்டுகழி வெண்ணெல் - அறுவடை செய்து ஓராண்டு கழிந்த பழைய வெண்ணெல்; ஆண்டு கழிந்த நெல்லையே பயன்படுத்துதல் இன்றும் பெருங்குடி வேளாளர் மரபு. அதனை வாரி வழங்கினள் எனவே. அவர்தம் மனையின் பெருகிய நெல்வளம் விளங்கும்.

விளக்கம் : 'வரால் சொரிந்த வட்டியுள் யாண்டுகழி நெல் பெற்று வரும் பாண்மகளிர்போல, நீ தரும் பொருளுக்கு எதிராகப் பரத்தையரின் தோள்முயக்கினை நின் பாணன் நினக்குப் பெற்றுத் தருவான்' என்பதாம். 'என்ன குறை செய்யினும், யாம் நின்னை விழைந்து நெகிழ்கின்ற நெஞ்சத்தேம்' என்பது ஒருவாற்றான் உண்மையாயினும், நீதான் நின் பரத்தை அவ்விடத்தே செய்த புணர்குறியோடு