பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. தோழி கூற்றுப் பத்து

தோழி சொல்லும் சொற்களேயாக அமைந்த செய்யுட்கள் பத்துக்கொண்ட பகுதியாதலால், இது "தோழி கூற்றுப் பத்து' என்றாயிற்று.

தோழியாவாள் தலைவியோடு கூடவே வளர்ந்தவள்; செவிலித்தாயின் மகளுமாவாள் எனவும், அன்பும் அறிவாற்றலும் உலகியல் தெளிவும் உள்ளத்துணிவும் பெற்றவள் எனவும், எப்போதும் தலைவியின் நலமே தன் கருத்தாக, அவட்கு எவ்வாற்றானும் உதவி நிற்றலே தன் கடனாகப் பேணி வாழ்பவள் எனவும் அறிவோம்.

ஆகவே, தலைவியினுங் காட்டில். தோழியின் பேச்சு சற்றே அழுத்தமும், உறுதியும், தெளிவும் அமைந்து, நன்மையே உள்நோக்காக விளங்கி நயமுடன் வெளிப்படும் எனலாம். இந்தச் செறிவையும் செம்மையையும் இச் செய்யுட்களிலே நாமும் காணலாம். பேச்சிலே நயத்தை இழைத்துச் சொல்லும் பெண்மைத் திறத்தினையும் இவற்றுள்ளே காணலாம்.

51. புளிங்காய் வேட்கைத்து!

துறை: வாயில் பெற்றுப் புகுந்துபோய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது.

[து. வி. : பரத்தமையாலே பிரிந்திருந்தவன், அதனைக் கைவிட்டுத் தன்வீடு மீண்டு, தலைவியின் ஊடல் தீர்த்துச் சிலகாலம் அவளோடும் கூடி மகிழ்வித்து இன்புற்றிருந்தனன். மீண்டும் அவன் அவளைப் பிரிந்து பரத்தையரைப் நாடிப்போகத். தலைவியின் உள்ளத்திலே மீண்டும் துயரம் மிகுந்தது; சில நாட்கள் சென்றபின்னே அவன் மீளவும் வீடு திரும்ப, அவள் அவனோடு புலவியுற்று ஊடி, அவனை அறவே ஒதுக்கி நின்றாள். அவன் மீண்டும் பணிமொழி பலகூறி வாயில் வேண்டத், தோழி வாயில் மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]