பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21


கண் : என்ன பாட்டி? அப்படிப் பெருமூச்சுவிட்டுச் சொல்லுகிறீர்கள்?

பாட்டி : பிள்ளைகள் கெடுவது பெரும்பாலும் தாய் தந்தைகளால்தான். பெற்றோர்களின் கெட்ட பழக்கங்களும் வழக்கங்களுமே பிள்ளைகளின் உள்ளத்தில் நன்றாகப் பதிகின்றன. அதை அறியாத பெற்றோர்களிற் சிலர், பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்தித் திருத்த முயலுவார்கள் முயன்றால் முடியுமா? பிள்ளைகளைத் திருத்துவதைவிட்டு, அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முயன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

கண் : பாட்டி! செல்லத்தின் பெற்றோர்களை உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அவ்வளவு கெட்ட பழக்க வழக்கங்கள் உள்ளவர்களா?


பாட்டி : அவர்களைப் பற்றியாவது, அவர்களின் குடும்பத்தைப் பற்றியாவது, அவர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியாவது எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள ஆசைப்பட்டதுமில்லை. ஆசைப்படுவதும் நல்லதல்ல. ஆனால், செல்லத்தின் தாய் பொய் பேசுவாள் என்பது மட்டும் எனக்குத் தெரியும்

கண் : பொய்சொல்வது அவ்வளவு பெரிய தவறா? பாட்டி!

பாட்டி : ஆம், கண்ணு! பொய் என்றதுமே என் உடல் நடுங்குகிறது. ஒரே ஒரு பொய்யால்தான் நம் குடும்பம் இத்தகைய அழிவிற்கு வந்தது. உன் தாய் உப்பு வாங்க எதிர் வீட்டில் நுழைந்தாள். உன் தந்தை வரும் பொழுது அதைப் பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தான் பின்னாலேயே உன் தாயும் வந்துவிட்டாள். ‘எங்கே போயிருந்தாய்?’ எனக் கேட்டான். ‘இங்கேதான் இருந்தேன்’ என்றாள். இப்பொய்யைச் சகியாத உன் தந்தை, முன்கோபி ஆதலின், ஓங்கி ஒரு அறை அறைந்து விட்டான் அடியைப் பெற்ற உன் தாய், அன்று முதல் உணவு அருந்தவில்லை பத்தாம் நாள் படுக்கையில் வீழ்ந்தாள். நாட்கள் பல ஆயின. எழுந்திருக்கவில்லை.