பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

என்ற அவரது சொற்கள், முற்றும் துறந்தும், தாயைத் துறவாத அம் முனிவரின் மன நெகிழ்ச்சியை நமக்கு நன்கு அறிவிக்கின்றன.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.”

என்பது ஒளவையின் வாக்கு. மனிதன் தன் கண்முன்னே முன்னதாக அறியப்படுகின்ற கடவுள் தாயே யாம் என்பதை இது நன்கு விளக்குகிறது.

தெய்வம் மட்டுமல்ல; கோயிலும் கூடத்தான் என்பதை “தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை” என்பதால் நன்கு அறியலாம். பெற்ற தாயைப் புறக்கணித்து விட்டு, புண்ணியம் கருதிக் கோயில் குளங்களுக்குச் சென்று வருவது பயனற்றது என்பது கருத்து. தன் பிள்ளைக்காகப் பரிந்து பேசுபவர் தாயைவிட வேறு எவரும் இவ்வுலகில் இல்லை என்பது முடிந்த முடிபாகும். இதனை அறிந்துதான், மாணிக்கவாசகர் இறைவனைக் குறித்து வேண்டும் பொழுது, “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என வேண்டியிருக்கின்றார். இதிலிருந்து தாயைவிட அதிகமாகப் பரிவு காட்டுகிறவர்கள் தெய்வங்கள்தாம் என்பதும், மக்களில் எவரும் இல்லை என்பதும் விளங்கலாம்.

எத்தகைய துன்பம் வந்தாலும், சான்றோர்கள் பழிக்கின்ற தீய செயல்களை ஒரு போதும் செய்யலாகாது என்பது, தமிழ் மக்களின் பண்புகளில் ஒன்று. பெற்ற தாயின் பசியைக் கண்ணால் கண்டு துடிக்கும் மகன் கூட தவறான வழியில் பொருளைத் தேடித் தன் தாயின் புசியைப் போக்கலாகாது என்பது தமிழரின் நெறி. இதனைக் கூறவந்த பேரறிஞர் திருவள்ளுவர்,

“ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை”

என அறுதியிட்டுக் கூறிவிட்டார். இதிலிருந்து, மக்கள் படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றிலும் தலைசிறந்தது தாயின் பசியைக் காண்பதுதான் என்பதும், பெற்ற வயிறு பசிக்கக் காண்பது பிறந்த மகனுக்குப் பெரிய இழிவு.