பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

 குன்றியது. அதிகாரிகள் ஆனைமீறி நடந்தனர். இரக்கமின்றி ஏழையெளியவர்களைக் கொடுமையாக நடத்தினர். இக்காலத்தில்தான் வீணாதி வீணன் வள்ளியூர்க் கோட்டைக்கு வந்தான். வீணாதி வீணன் இளைய மந்திரியானதற்குப் பின், கன்னடியன் படையெடுக்கச் சந்தர்ப்பம் நோக்கியிருந்தான். முதற் படை யெடுப்பில் குலசேகரன் காட்டிய தீரத்தைக் கேள்விப்பட்ட கன்னட இளவரசி அவனையே மணப்பதெனத் தீர்மானித்து, தன் தந்தையிடம் தனது ஆசையைத் தெரிவித்தாள். கன்னடிய அரசன் திருமணத்திற்கு இணங்குமாறு இறைஞ்சி குலசேகரனுக்கு ஓலையனுப்பினன். குலசேகரன் தூதுவனிடம், "பகைவர் வீட்டில் பெண் கொண்டு அவர்களுக்கு அடிமையாக மாட்டேன்" என்று மறுப்புக் கூறி அனுப்பினான். இதனையறிந்த கன்னடிய அரசன் சீற்றம் கொண்டு அவனைச் சிறை பிடித்து கட்டாயமாக தனது மகளுக்கு மணம் செய்விக்க படை கொண்டு வந்தான். பல ஆண்டுகள் முற்றுகையை எதிர்த்து நின்ற பின் வள்ளியூர்க் கோட்டை கன்னடியன் வசமாயிற்று பஞ்ச பாண்டியர் தப்பியோடி தங்கள் உறவினனான திருவாங்கூர் மன்னனிடம் அடைக்கலம் நாடினர். அவன் கன்னடிய அரசனது சீற்றத்துக்கு அஞ்சி அவர்களுக்கு தஞ்சமளிக்க மறுத்தான். அவர்கள் மேல்மலைக் காடுகளில் அலைந்தனர். குலசேகரன் படைகளைக் கலைத்துவிட்டு நான்கு சகோதரர்களோடும் ஒரு சிறு படையோடும் இரண்டொரு முறை வள்ளியூர்க் கோட்டை மீது திடீர் தாக்குதல் நடத்தினான்.பாண்டியர்களின் மறை விடத்தை ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட கன்னடியன் பெரும் படையனுப்பி அவர்களைச் சூழ்ந்துகொள்ளச் செய்தான். அவர்களைச் சிறைப்படுத்த முயலும் பொழுது நடைபெற்ற போரில் நான்கு சகோதரர்கள் மாண்டனர். குலசேகரன் சிறைப்பட்டான். குலசேகரனே பல்லக்கில் அமர்த்திக் கொண்டு செல்லும் பொழுது அவன் தனது கத்தியால் கழுத்தில் குத்திக்கொண்டு உயிர்விட்டான். கன்னடிய இளவரசி உயிர் நீத்த குலசேகரனைக் கண்டு அவனையே மணந்து கொள்ள உறுதி பூண்டு நகரை அலங்கரித்து, தானும் மண விழாக்கோலம் பூண்டாள். மங்கல உடையணிந்து, குதிரை மீதேறி குலசேகரனது சடலத்தை அலங்கரித்து அதற்கு மாலையிட்டாள். பின்னர் அச்சடலத்தைஎரிக்கும்பொழுது உடன்கட்டையேறினுள். இதுவே ஐவர் ராசாக்கள் கதைப்பாடலின் சுருக்கம்.

கன்னடியர் வந்ததேன்?

கன்னடிய மன்னர்கள் எதிர்த்து நின்ற பாண்டியர்களைப் பற்றி அக்கால மக்கள் அறிந்திருந்தனர். கன்னடிய மன்னர்கள் தமது