பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21


அங்கு ஒரு கோவிலும் அவள் பெயரால் இருக்கிறது. ஆனால் இது தவிர அவளைப் பற்றிச் சாசனச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. கதைப் பாடல் குலசேகரன் சடலத்தை கன்னடிய மன்னன் தன் நகரத்திற்குக் கொண்டுபோய் விட்டான் என்று சொல்லுகிறது. இளவரசியும் கன்னட நாட்டின் தலைநகரில் தான் தன் விநோதமான திருமணத்தை நடத்திக்கொண்டாள் என்றும், உடன் கட்டை யேறினுள் என்றும், கதைப் பாடல் கூறும். ஆனால் செவி விழிச் செய்திகள் வேறுவிதமாகக் கூறுகின்றன. எனவே கன்னடிய இளவரசி உடன்கட்டையேறிய கதையைச் சரித்திர நிகழ்ச்சியாகக் கருதப் போதிய ஆதாரம் இல்லை.

கதைப் பாடல் இயல்பு

ஆனால் கதைப் பாடல்கள் வரலாறுகள் அல்ல. அவை வீர காவியங்கள். இடையே மனிதப் பண்பின் உயர்ந்த அம்சங்களைப் போற்றுபவை. சமூகச் சீர்கேடுகளைக் கேலி செய்பவை. இவற்றைக் கற்பனையால் உருவான நாட்டார் படைப்பு என்றே கொள்ள வேண்டும். ஆனால் அக் கற்பனை கட்டவிழ்ந்த ஆகாசக் கோட்டைகளல்ல. சரித்திர நிகழ்ச்சிகளையும், சரித்திர சூழ்நிலையையும் அடிப்படையாகக் கொண்டு மனிதப் பண்புகளில் உயர்ந்தனவற்றைப் போற்றி கதாபாத்திரங்களையும், கதை நிகழ்ச்சிகளையும், கற்பனையால் படைத்திருக்கிறார்கள் நாட்டுப் பாடல் கலைஞர்கள்.

கதையமைப்பு

ஐவர் ராசாக்கள் கதை ஓர் நாட்டுப் பாடல் காவியம் இதனுள் சில காவிய மூலங்கள் (Epic Elements) உள்ளன. அவற்றை இப்பகுதியில் ஆராய்வோம்.

மூலப் பகுதிகள்

இக் கதையின் மூலப்பகுதிகள் (Elements) இக் கதை தோன்றுவதற்கு முன்பே தனிச் செய்திகளாகவோ, கதைகளாகவோ இருந்திருக்க வேண்டும். சில மூலப் பகுதிகள் கதை உருவான பின் பாடப்படும் பொழுது சில நூற்றாண்டுகளாக இக் கதையோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பழைய அம்சங்கள்

மூலக் கதையின் பழைய அம்சங்கள் (1) பாண்டியர் வரலாறு பற்றிய கதைகள் (2) கோட்டை கட்டிய வரலாறு (3) கன்னடியர் போர், கோட்டையின் அழிவு முதலியன.