பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



24

பதை இக்கதைக் கருப்பொருள்களை நோக்கினால் தெரியும். யானையை அடக்கியது, தேவேந்திரன மதியாமல் அவனை ஏமாற்றி வித்துக் கொண்டுவந்தது, பூதங்களை ஏமாற்றி வேலை வாங்கியது. இது போன்ற கதைகள் இன்றும் தனிக் கதைகளாகப் பாண்டிய வரலாற்றோடு தொடர்பில்லாமல் வாய் மொழிக்கதைகளாகச் சொல்லப் படுகின்றன. யானையை அடக்கிய கதை மக்கள் வரலாற்று முற்காலத்தில் வேட்டையாடும் குழுக்களாக வாழ்ந்த போதே தோன்றி விட்ட கதை. இது குழுவாகச் சேர்ந்து யானையைக் கொன்ற நிகழ்ச்சிகளின் குழுநினைவாகப் பின்னால் எஞ்சி நின்றது, தனிமனித வீரக் கதைகள் வாய் மொழியாகத் தோன்றிய பிற்காலத்தில் இந்த நினைவின் அடிப்படையில் தெய்வ லோக யானையை அடக்கிய கதைகளும் (பாண்டியர் பற்றியகதை) அல்லது, பூலோக யானையை அடக்கிய கதைகளும் (ஜீவகன்கதை, கோவலன்கதை, புத்தர்கதை) தோன்றின. இவையாவும் முந்திய குழு நினைவிலிருந்து தோன்றியவை. பூதங்களை ஏமாற்றிய கதைகள் எல்லா மொழிகளிலும் உள்ளன. இயற்கைச் சக்திகளைப் பூதங்கள், தெய்வங்கள் என்று குழுமக்கள் நினைத்ததோடு தங்களை விட வலிமையுடையனவாக எண்ணினார்கள். அதனால் அவற்றைத் தெய்வங்களாக வழிபட்டார்கள். அவற்றின் தயவால் பல நன்மைகள் பெறலாம் என்று எண்ணினார்கள். சில குழுக்கள் இப்பூதங்களை ஏமாற்றி வேலை வாங்கலாம் என்று எண்ணினார்கள். இதுவே மந்திரவாதத்தின் அடிப்படையாகும். இவ்வடிப்படையில் பூதங்களைப் பணியவைத்த கதைகள் உலகமெங்கும் குழு மக்களிடையே தோன்றின குழுக்கள் அழிந்து ஒரு நிலப்பரப்பில் பயிர் செய்து வாழ்ந்த மனிதன், அரசை ஏற்படுத்திக் கொண்டு ஆறுகளை அடக்கிப் பரவலாகப் பயிர் செய்யத் தொடங்கிய காலத்தில் மனித சக்தியை உணர்ந்தான். இச் சக்தியை ஆட்சித்தலைவனை அரசன் மீதேற்றி அவனுக்கு மக்களுக்கு இல்லாத பெரும் சக்தியுண்டென்று எண்ணினார்கள்-இந்த நம்பிக்கையில்தான் அரசன் பூதங்களை அடிமைகொண்டு கோயில் கட்டியதாகவும் பரந்த நிலப்பரப்பில் பயிர் விளைவித்ததாகவும் கதைகள் புனையப்பட்டன. மனிதன்தான் பல கோயில்கள் கட்டினான். ஆனால் இப்பெரிய காரியங்களை மனிதன் செய்ய முடியாதென்ற நம்பிக்கையில் பூதங்களைக் கொண்டு அரசன் கட்டு வித்தான் என்ற கதையை மக்கள் புனைந்தனர். இது போலவே பெருநிலப்பரப்பில் பயிர் விளைவித்ததைப் பூதங்களைக் கொண்டு பாண்டியர்கள் செய்வித்ததாக குலசேகரன் கூறுகிறான். இன குலப் பெருமை கன்னடியனுக்கு அக்காலத்தில் இல்லை. பழங்காலத்தில் வந்த பாண்டியர் குடி தனது குடியைப் பற்றிய பல கதைகளை புனைந்து கொண்டதோடு பல பழைய குழுக்களால்