பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



31

இது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. எனவே பல விடங்களில் ஓட்டை விழுந்துள்ளது. எழுத்தும் சில விடங்களில் படிக்க முடியாமல் இருக்கிறது. ஏட்டில் எழுதுவதுபோல எழுத்தமைப்பு காணப்படுகிறது. லென்ஸ் வைத்துத்தான் படிக்க முடியும். இப் பிரதியில்தான் கதை முழுதும் கிடைக்கிறது. (3) ஐவர் ராசாக்கள் கதை -(நாடார் பிரதி) புதிய பிரதி இது. அகஸ்தீஸ்வரம் ஆறுமுகப் பெருமாள் நாடார் அளித்தது. இப் பிரதி புதிதாக ஆறுமுகநேரி ராமசந்திர டோகோ அவர்களது முயற்சியால் பிரதி செய்யப்பட்டு எனக்கு அளிக்கப்பட்டது. இப் பிரதி படிப்பதற்கு எளிதாயிருப்பினும் இடையிடையே சில பகுதிகள் காணப்படவில்லை. இக்கதைப் பாடலை எழுத மூன்று பிரதிகளும் பயன்பட்டன முதல் பகுதிக்கு மாலையம்மன் கதையையே பழைய பிரதியாகக் கொண்டுள்ளேன். புதிய பிரதியில் வேறு பாடங்கள் அல்லது பகுதிகள் காணப்பட்டால் மாலையம்மையின் கதையிலுள்ள பாடங்கள் அல்லது பகுதிகளையே மூலமாகக் கொண்டுள்ளேன். அதற்கும் 150 ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட பிரதிக்கும் வேறுபாடு இருந்தால் பழைய பிரதியையே மூல ஆதாரமாகக் கொண்டுள்ளேன். முடிந்த அளவு மூல நிர்ணயம் பற்றிய மேனாட்டு விமர்சகர்களின் கொள்கைகளே இப் பிரதியின் மூலங்களை நிர்ணயிக்கப் பயன்படுத்தியுள்ளேன். இக்கதைப் பாடலைப் பெயர்த்தெழுதுவது மிகவும் கடினமான பணி. ஒரு பிரதி மட்டுமல்லாமல் பல பிரதிகளை ஒப்புநோக்கி எழுதுதல் வேண்டும். கவுண்டர் பிரதியைப் பார்த்தெழுதுவது மிகமிகக் கடினம். லென்ஸின் உதவியோடுதான் படிக்க முடியும். மடக்கினால் தாள் முறிந்துவிடும் : பலமுறை ஒப்பு நோக்கி. எழுதவேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுத ஆரம்பித்து இடையில் விட்டுவிட்ட பணியைக் கடந்த 16 மாதங்களாகத் தொடர்ந்து செய்து முடித்து முழுக் கதைப் பாடலையும் அச்சிடத் தயாரித்த எனது நாட்டுப் பாடல் துறை உதவியாளர் குமாரி மங்கை பெரிதும். இப்பணியில் உதவி செய்திருக்கிறார் விடாமுயற்சியோடும், சலிப் பில்லாமலும் பிரதிகளை ஒப்பு நோக்கிப் பல தடவை எழுதி எழுதித் திருத்திப் பின்னர் முழுமையாக எழுதி முடித்த குமாரி மங்கைக்கு எனது ஆசியும், நன்றியும் உரித்து.