பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐவர் ராசாக்கள் கதை


முன்னுரை


1957-ல் முத்துப்பட்டன் கதை பற்றிய சரித்திர உண்மைகளை ஆராய்ந்து வந்தேன். அப்பொழுது கல்லிடைக்குறிச்சியில் வாழ்ந்து வந்த முத்துப்புலவர் என்ற வில்லுப்பாட்டுப் புலவரைச் சந்தித்து இக்கதை விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தேன், அவர் முத்துப்பட்டன் கதை சம்பந்தமான பல அபூர்வமான தகவல்களை எனக்குச் சொன்னார். அது முடிந்ததும் வீணாதிவீணன் கதையைப் பற்றி கேட்டேன். அவர் அக் கதையை வில்லுப் பாட்டாகப்பாடும் வழக்கம் நின்று விட்டதென்றும், வள்ளியூர், பணகுடிப் பகுதிகளில் இக்கதையைப் பற்றி விசாரிக்கலாமென்று சொன்னார். அதோடு சிங்கம்பட்டியில் வாழ்ந்து வந்த ஒரு முதியவரிடம் கேட்டால் ஒரு வேளை இக்கதையின் விவரங்களை அறியலாம் என்றும் சொன்னார். அவர் பெயர் சிவசுப்பிரமணியத் தேவர். வயது 94.

அவர் நாட்டுக் கதைப்பாடல்கள் பலவற்றை அறிந்திருந்தார். வீணாதிவீணன் கதைக்கும் ஐவர் ராசாக்கள் கதைக்கும் தொடர்பு உண்டு என்று அவர் கூறினார். ஐவர் ராசாக்கள் கதை என்னவென்றே எனக்கு அப்பொழுது தெரியாது. அவர் ஐவர் ராசாக்கள் கதை, பஞ்சபாண்டியர் கதை, கன்னடியன் படைப் போர், உலக முழுதுடையாள் கதை, வெட்டும் பெருமாள் கதை என்ற ஐந்து கதைப் பாடல்களும் ஒரே வரலாற்றைச் சொல்லுவன என்று தெரிவித்தார்.

இக் கதைகளின் சுருக்கத்தையும் கீழ்வருமாறு தெரிவித்தார்.

தென் தமிழ் நாட்டில் பாண்டிய குலச் சகோதரர்கள் ஐவர் ஐந்து கோட்டைகள் கட்டி ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களுள் மூத்தவன் குலசேகரன். இவன் கழைக்கூத்தி ஒருத்தியைக் காதலித்து மணந்து கொண்டான். அவளுக்கு உலக முழுதுடையாள் என்ற அரசபட்டமும் வழங்கினான். சில நாட்களுக்குப் பின் வெங்கல ராசன் என்ற கன்னடிய மன்னன் ஐந்து பாண்டியர்