பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பேசிக் கொண்டிருந்தேன். எனக்குத் நாட்டுப் பாடல் துறையில் ஆர்வம் உண்டென்பதும், இரண்டு தொகுப்புகள் நான் வெளியிட்டிருந்ததும் அவர்களுக்குத் தெரியும்.

"நீ நீண்ட கதைப் பாடல்களை வெளியிட எண்ணியிருக்கிறாயா ? என்னிடம் ஐவர் ராசாக்கள் கதையொன்று இருக்கிறது. கதை முழுவதும் இருக்கிறது. எழுதிய தாள் மிகவும் பழமையானது. கைப்பட்டாலே நொறுங்கி விடும். நீ வெளியிடுவாயானாலோ, அல்லது ஆராய எண்ணினாலோ உனக்கு அதனைக் கொடுத்து விடுகிறேன்" என்றார்கள்.

எனக்குப் பேசவே ஓடவில்லை.

"எத்தனை வருஷங்களாக இது உங்களிடம் இருக்கிறது?" என்று கேட்டேன்.

"பத்து வருஷமாக" என்றார்கள்.

நான் பத்து வருஷமாக இக்கதையைத் தேடியலைந்து அலுத்துப் போன விவரங்களையெல்லாம் கூறினேன்.

"என்னிடம் கேட்டிருக்கக் கூடாதா?" என்றார்கள்.

"உங்களுக்கு இத் துறையில் ஆர்வமுண்டு என்று எனக்கு எப்படித் தெரியும் ? இலக்கிய வரலாற்றிலும், இலக்கிய ரசனையிலும், தமிழர் வரலாற்றிலும் உங்களுக்கு ஆர்வமுண்டு என்பது எனக்குத் தெரியும். நான் தேடிக் கொண்டிருக்கும் கதை உங்களிடம் இருக்கு மென்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்றேன்.

கதைப்பாடல் எழுதிய நோட்டுப் புத்தகங்களை அனுப்பி வைத்தார்கள்.

அது 1828ல் எழுதப்பட்டது. ஆனால் பாடல் முதலில் தோன்றியது. அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால், இப்பிரதி ஏட்டுப் பிரதியிலிருந்து பெயர்த் தெழுதப்பட்டது.

முழுதும் படித்துப் பார்த்தேன். முழுக்கதையும் இருந்தது. சிற்சில இடங்களில் துளைகள் இருந்தன. ஆயினும் முழுவதும் வாசித்து விட முடிந்தது.

இக்கதையின் ஒரு கிளைக்கதையாய் வீணாதிவீணன் கதை காணப்பட்டது. ஐவர் ராசாக்கள் - கதையும், வீணாதிவீணன் கதையும் நாட்டுப் பாடல் இலக்கியத் துறையில் மிகச் சிறந்த படைப்புகள்.