பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

ஆகவே, இவைகள் பல ஆண்டுகளாவே திராவிட கழகத்தின் சார்பில் அவர்களுடைய கொள்கைக்கு ஏற்ப நடைபெற்று வருகின்ற சம்பவங்களாகும். ஆனாலும் இவை காரணமாக மற்றவர்களுடைய மனம் புண்படுகிறது என்ற நேரத்திலும் இவற்றின் விளைவுகள் வேறு வகையிலே விபரீதமாக ஆகிவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நேரத்திலும் இந்த அரசு தலையிட்டு சட்டம், ஒழுங்கு, அமைதி இவைகளை காப்பாற்றுகின்ற பொறுப்பினை நிச்சயம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதை நான் தட்டிக்கழிக்க விரும்பவில்லை

இதிலே ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. இன்றைக்கு திராவிடக் கழகம் நடத்துகின்ற இராவண லீலா எப்படி உருவாயிற்று என்றால் வடக்கே இராம லீலா நடத்தப்படுவதன் எதிர் ஒலியாகத்தான் இராவண லீலா இங்கே நடத்தப்படுகிறது. அங்கே இராம லீலா நடத்தப்படுகின்ற இடங்களுக்கு நாட்டுப் பிரதமர் மத்திய அமைச்சர்கள் இவர்களெல்லாம் செல்வதும், அந்த இராம லீலா உற்சவத்தில் இராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோர்களுடைய உருவங்களை அவர்கள் எரிப்பதை இவர்கள் கண்டு ரசிப்பதும், தமிழகத்தில் இராவணன் ஒரு தமிழன், இராவணன் ஒரு திராவிடன் என்ற வகையிலே உருவாக்கப்பட்டிருக்கிற வரலாற்று அடிப்படையில் அவரைப் போற்றிக்கொண்டிருக்கிற பகுத்தறிவாளர்களின் வரலாற்று அணியை ஒப்புக்கொண்டிருக்கிற திராவிடக் கழகத்தினரிடத்தில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் காரணமாகத்தான் இன்றைய திராவிடக் கழகத் தலைவராக விளங்குகிற மணியம்மையார் இந்தியப் பிரதமருக்கு அது குறித்து ஒரு கடிதம் எழுதி, அதிலே தாங்கள் இங்கே பதிலுக்கு இராவண லீலா நடத்தவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கு மதிப்பு மிகுந்த இந்திரா காந்தி அவர்கள் எழுதிய பதில் கடிதத்தில் அந்தக் கடிதம் எல்லா பத்திரிகைகளிலும் வெளியாகியிருக்கிறது நாட்டினுடைய பொருளாதார நிலைமைகளை நாம் இன்றைக்கு கவனிக்க வேண்டுமேயல்லாமல், இப்படிப்பட்ட காரியங்களில் நம்முடைய சிந்தனையை செலவிடக்கூடாது' என்று குறிப்பிட்டார்கள்.