பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

உரை : 2

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

பாசன வசதி

நாள் : 29.11.1967

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, டாக்டர் ஹாண்டே அவர்கள் கொண்டுவந்துள்ள இந்த ஒத்திவைப்புத் தீர்மானம், தீர்மான அளவில் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லையென்றாலும், முக்கியத்துவம் கருதி இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

தென்மேற்குப் பருவமழை காலத்தில் மேட்டூர் நீர்த் தேக்கம் கணிசமான அளவு நிரம்பி, மிகுந்த ஊக்கத்துடனும் கவனத்துடனும் பாசன நீர் வழங்கி குறுவை, ஆடுதுறை 27 நெற்பயிர் காவிரிப் பாசன பகுதிகளில் பொழிந்து விளைந்தது வெளிப்படை. இயல்பாக குறுவை காலத்தில் உபயோகிக்கும் நீர் அளவையே இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாகப் பயன்பெறும் அளவில் உபயோகிக்கப்பட்டது.

ஆயினும் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மேட்டூர் நிரம்பவில்லை. மெர்க்காராப் பகுதிகளில் மழைப் பற்றாக்குறை 13 சதவிகிதம். நீர்த்தேக்கத்திற்குச் சேரும் நீர்வரத்தில் பற்றாக்குறை 17 சதவிகிதம். காவேரி சங்கமுகப் பகுதிகளில் சராசரி மழையில் 46 சதவிகிதமே இவ்வாண்டு மழை பெய்தது.

வடமேற்குப் பருவமழைக் காலத்தில் வானம் மேலும் பொய்த்துவிட்டது. மெர்க்காராப் பகுதிகளில் மழைப் பற்றாக்குறை 60 சதவிகிதம். சராசரி வாரத்திற்கு இப்பருவத் திங்களில் நமக்குக் கிட்டிய நீர்வரத்து 30 சதவிகிதமே. காவேரி சங்கமுகப் பகுதிகளில் அக்டோபர் திங்களில் சற்று அதிகமாக மழை பெய்த போதிலும் நவம்பர் திங்களில் இயல்பைவிடக் குறைவு. 5-11-1967-ம் நாளுக்குப் பின் மழையே இல்லை.