கலைஞரின் சட்டமன்ற உரைகள்
45
அதற்கும் பதில் தேவை. இந்தப் பதில்கள் அளிக்கப்படாத வரையில் நான்கு கோடி தமிழ் மக்களின் சார்பில் இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலை, சம்மதத்தைத் தரத் தயாராக இல்லை என்று எடுத்துச்சொன்னேன். மறுநாள் பேசிய நம்முடைய நிதியமைச்சர் அவர்களும் பிரதமர் அவர்கள் உரையில் இதைக் கோடிட்டுக் காட்டுவார்கள் என்று காத்திருந்து, கோடிட்டுக் காட்டாத காரணத்தால் இறுதியாக, முதல்நாள் முதலமைச்சர் எடுத்துச்சொன்ன நிபந்தனைகள் என்னவாயிற்று, அதற்கு என்ன பதில் என்று கேட்டார்கள். அதற்கு அங்கே பதில் அளிக்கப்படவில்லை. புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வகையிலே தமிழகம் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்திற்குச் சம்மதம் தரவில்லை என்ற காரணத்தால் அந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள எதையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லையென்று அர்த்தமல்ல. நம்முடைய உணர்ச்சிகளைக் காட்டியிருக்கிறோம். நம்முடைய உணர்ச்சியை இந்த வகையில் தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் காட்டியிருக்கிறோமே அல்லாமல் திட்டத்தையே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை, திட்டமே தேவையில்லை என்ற நிலைக்குச் செல்லவில்லை. வருவதை விடுவதாக இல்லை. அதே நேரத்தில் தமிழர்களின் உணர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில் நீண்ட நெடும் காலமாக சேலம் உருக்காலைத் திட்டம் வரும் வரும் என்று அறிவிக்கப்பட்டும் இன்னும் வராமல் இருக்க என்ன காரணம், அதைப்பற்றி அறிவித்தாக வேண்டுமென்ற அடிப்படையில்தான் நான், நிதியமைச்சர் இருவரும் பேசுகின்ற நேரத்தில் இந்த விஷயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறோமே தவிர வேறு அல்ல.
தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பில்கூட சேலத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை அதிலே-
Advance action for additional steel capacity in the Fifth Plan, என்று போட்டு அதற்காக 110 கோடி ரூபாய் ரிவைஸ்டு அவுட்லே என்ற அளவில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அடிஷனல் அவுட்லே என்ற அளவில் 90 கோடி ரூபாய் என்று குறிக்கப் பட்டிருக்கிறது. அதே நேரத்தில் என். எம். டி. சி. என்பதற்காக கூடர்முக் இதைக் குதிர்முக், குதிரை மூக்கு என்றெல்லாம் சொல்கிறார்கள் - என்று பெயர் குறிப்பிட்டு 15 கோடி ரூபாயில் பிராஜக்ட் ஏற்படுத்துவது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
-