பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

நம்முடைய உரிமைகள் எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன. ஆகவே, நாங்கள் பிரிந்து போகவேண்டுமென்று கேட்ட நேரத்திலே, இந்தியாவினுடைய பாதுகாப்பு, இந்தியாவின் பலம் குறைந்துவிடும் என்றார்கள். இந்த அடிப்படையிலே பிரிவினைக் கோரிக்கை தேவையில்லை என்று விட்டுவிட்ட பிறகு நம்முடைய நாட்டுக்குத் தேவையான உரிமைகள், அடிப்படை சாதனங்கள் தரப்படாததாலே இந்தக் காரணங்கள் அப்படியே வந்திருக்கின்றன. என்ன காரணத்திற்காக பிரிவினை கேட்கிறோம் என்று சொன்னோம்? "பிரிவினை கேட்காதீர்கள். இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும்" என்று கூறிய நேரத்திலே, பிரிவினைக் கேட்கவில்லை. ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன. குறைபாடுகள் இருக்கின்றன. இவைகள் தீர்க்கப்பட வேண்டுமென்று கூறுவது பிரிவினைவாதம் ஆகாது.

மாநில சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை அழித்துவிட வேண்டுமென்பதற்காக; இந்தியா வலிவானதாக, பலமானதாக இருக்கவேண்டுமானால், மாநிலங்கள் சுய ஆட்சி பெற்று அதிக அதிகாரங்கள் பெற்று அமைந்துவிடுமானால் இந்தியாவிலேயே அமளி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு இந்திய ஒருமைப்பாட்டு நிலையில் அமளிகளும் ஆர்ப்பாட்டங்களும் ஏற்பட வேண்டுமென்று யாரும் கருதிக்கூடப் பார்க்கத் தேவையில்லை. அமளிகள், சச்சரவுகள், தகராறுகள் இவைகள் எல்லாம் ஏற்படுகின்றன என்றால், அதற்கு தக்க சூழ்நிலை பிரச்சினை அடிப்படையிலே ஏற்படுகின்றதே தவிர, வேறு இல்லை. இன்றைக்கு மாநில சுய ஆட்சி இல்லை. ஆனால் மாநிலங்கள் இருக்கின்றன. மைசூருக்கும் தமிழகத்திற்கும் இருக்கிற நதி நீர்த் தகராறு பற்றிக்கூட மாண்புமிகு உறுப்பினர் திரு. சுப்பராஜா அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

ஆக, மாநில சுயாட்சி இல்லாத நேரத்திலேயே நீர்த் தகராறு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மாநில சுயாட்சி ஏற்பட்டால்தான் தகராறுகள் ஏற்படலாம் என்று முன்கூட்டியே ஏதோ ஒரு ஆபத்து வரப்போகிறது என்று கனவு காணுவதற்குத் தேவையே இல்லை. நான் வலியுறுத்தி, வலியுறுத்திக் கூறிக்கொண்டு வந்திருக்கிறேன். முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நடைபெறுகின்ற மாநாட்டுத் தீர்மானங்களிலும், செயற்குழுத் தீர்மானங்களிலும் தெளிவாக விளக்கி வந்திருக்கிறோம்.