பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

நீங்கள்தானே தவிர, நாங்களல்ல. மன்னிக்கவும், நான் இதைச் சொல்வதற்காக, அந்தக் கொடியில் உள்ள தேசியக் கொடியை எதிர்ப்பதால் நீங்கள் தேசத் துரோகிகள் ஆகிறீர்கள். அந்தக் கொடியில் உள்ள கோபுரச் சின்னத்தை எதிர்ப்பதால் நாஸ்திகர்கள் ஆகிறீர்கள். இப்படி தேசத் துரோகிகளாகவும் நாஸ்திகர்களாகவும் ஏன் மாறுகிறீர்கள் என்பது புரியவில்லை.

மாநிலத்திற்கு ஒரு கொடி என்றால் ஊராட்சி மன்றத்திற்கும் கொடி கேட்பார்கள் என்று சொல்வது மாநிலத்திற்கு ஒரு கொடி என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகச் செய்யப்படுகிற வாதமே தவிர வேறு இல்லை. கன்னியாகுமரியிலே பார்த்தேன். படகுகளில் தனிக்கொடிகள் இருக்கின்றன. விமான நிலையத்திற்குத் தனிக்கொடி இருக்கிறது. மதுரையிலே விமான நிலையத்திலே நீல நிறமுள்ள கொடியில் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட கொடி பறந்தது. உடனே சிலர் என்ன இது மாநிலத்திற்கு கேட்கப்பட்ட தனிக் கொடியா என்று கேட்டபொழுது, இது மாநிலக் கொடியா, கருணாநிதி வருகிறார் என்பதற்காக இருக்கிறதா என்று கேட்டபொழுது, இல்லை இல்லை நீண்டகாலமாக இது இருக்கிறது. விமான நிலையத்திற்கான கொடி இது என்று விமான நிலையத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே தனித்தனியாக உள்ள அமைப்புகளுக்கு, அதிகாரிகளுக்குக் கொடி இருக்கிற நேரத்திலே மாநில அமைச்சர்களுக்கும் கொடி இருக்கவேண்டும் என்பதைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் ஆனந்தப்படவேண்டிய காரியமே தவிர இது வேறில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் அந்தக் கொடியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனென்றால், எதிர்க்கட்சித் தலைவர் நல்ல மரியதையோடும், கிட்டத்தட்ட அமைச்சரளவிற்கு நடத்தப்பட வேண்டுமென்ற கருத்தை இதே அவையிலே கூறியிருக்கிறேன். அதற்கான மசோதா வெகுவிரைவிலே வரவிருக்கிறது. ஆகவே, அந்த அளவிலே மாநிலத்திற்கு என்று ஒரு கொடி போடுவது பிரிவினை மனப்பான்மையோடு போடப்படும் கொடி அல்ல என்பதைத் திட்டவட்டமாக நான் இங்கு கூற விரும்புகிறேன்.