பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

81

உரை : 14

பாண்டியாறு - புன்னம்புழா

நாள் : 2.4.1971

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: தலைவரவர்களே, பாண்டியாறு- புன்னம் புழா நதிகளின் நீரை மின்சாரத்திற்குப் பயன்படுத்துவதோடு விவசாயத்திற்கும் பயன்படுத்தலாமா என்று தமிழ்நாடு அரசு யோசித்தது உண்மை. ஆனால் கேரள அரசைக் கலந்து கொள்ளாமல் அந்த முயற்சியில் ஈடுபடவோ, சாலியாறுக்குச் செல்ல வேண்டிய தண்ணீரைத் தடுத்து கேரள மக்களுக்கு பாதகமாக தமிழ்நாட்டு விவசாயத்துக்கு பயன் படுத்திக் கொள்ள, எந்தவித தடுப்புகளை அமைக்கவோ இந்த அரசு முற்படவில்லை.

இதுபற்றி கேரள அரசுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதியில் தமிழக அரசு ஒரு கடிதம் எழுதியிருக்கிறது. அதில், கேரள அரசுடன் உடன்பாடு ஏற்படும் வரையில் பாண்டியாறு- புன்னம் புழாவிலிருந்து தண்ணீர் திருப்பிவிட மாட்டாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறது. என்ன காரணத்தாலோ, அந்தக் கடிதம் கேரள முதல்வர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படவில்லை என்று அறிகிறேன். நேற்று, அவர் கேரள சட்டமன்றத்தில் வெளியிட்ட கருத்தினை அறிந்ததும், உடனடியாக நான், அவருக்கு ஒரு கடிதம் எழுதியதோடு அதில் பிப்ரவரி 19-ல் தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தையும் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.

இது சம்பந்தமாக முதலில் இரு மாநில அதிகாரிகளும் சந்தித்துப் பேசி, பிறகு அமைச்சர்கள் மட்டத்தில் பேசி அதற்குப் பிறகு ஒரு உடன்பாட்டுக்கு வரலாம் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறேன்.

4-க.ச.உ.(ஒ.க.)