பக்கம்:ஒத்தை வீடு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 புதைமண் கவிதையின் தரம், அதைத் தாங்கும் காகிதத்தில் இருப்பது போல், ஒரு மடிப்போ, பிடிப்போ, கரும்புள்ளியோ, செம்புள்ளியோ இல்லாத காகிதங்களை "பேடில்" சொருகினான். ஆனாலும் அவன் எழுதியவை "பேடாக" இருப்பது, அவனுக்கே துல்லியமாக தெரிந்தது கவிதையின் தரத்தை உயர்த்துவதற்காக, சித்தப்பா வைத்துவிட்டுப் போன கோப்பிலிருந்த கணிப்பொறி காகிதங்களை எடுத்தான். எவ்வளவுக்கு எவ்வளவு அவை லேசாய் இருந்தனவோ, அவ்வளவுக் அவ்வளவு பளபளப்பாக இருந்தன. செல்வா, கவிதாவை மானசீகமாக முகத்திற்கு எதிராக முன்னிருத்திக் கொண்டே எழுதப் போனான். மனதிற்குள் அந்த கவிதாதான் சுரந்தாளே தவிர, கவிதை சுரக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் மனதிற்குள் அவள் வெள்ளப் பிரவாகமாக வந்து கொஞ்சம் நஞ்சம் உழைத்த கவிதைப் பயிர்களை அடித்துக் கொண்டு போய்விட்டாள். செல்வா, தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். ஒரு படைப்பாளியின் படைப்பை படிக்கும்பொழுது, நாமும் இப்படி எழுதலாம் போலிருக்கிறதே என்று ஒர் உணர்வு வந்தால், அது படைப்பாளிக்கும் படைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்று எங்கேயோ ஒரு இலக்கியக் கூட்டத்தில் இவன் நிசமாகவே மழைக்கு ஒதுங்கியபோது, ஒரு பிரபல எழுத்தாளர் பேசியது நினைவுக்கு வந்தது. அப்படிச் சொன்னவர் கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, கே.சி.எஸ். அருணாசலம், டாக்டர் தயானந்தன் பிரான்ஸிஸ், தணிகைச் செல்வன், இன்குலாப், வைரமுத்து, வாலி, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, அறிவுமதி, பழனிபாரதி ஆகியவர்களை மேற்கோள் காட்டினார். இவர்களுடைய கவிதைகளை இவன் படித்தானோ படிக்கவில்லையோ, அந்த எழுத்தாளர் மேற்கோள் காட்டிய வரிகளை தன்னாலும் எழுத முடியும் என்ற ஒரு நம்பிக்கை வந்தது. அப்போதே, தானும் ஒரு கவிஞன்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் ஆனால், ஒரு வரிகூட கவித்துவ வரியாக வரவில்லை. செல்வாவுக்குள் ஒரு பொறி. எலிப்பொறி மாதிரியான திருட்டுப் பொறி. இந்தக் கவிஞர்களின் கவிதைகளையே திருடி அங்குமிங்குமாய் மாற்றி அசல் சினிமாக் கவிஞனாய் ஆகி விடலாமா என்று நினைத்தான். பள்ளிக்கூடத்தில் இவன் படித்த சங்ககால, இடைக்கால, சிற்றிலக்கிய கால கவிதைகளை கையாண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/134&oldid=762188" இலிருந்து மீள்விக்கப்பட்டது