பக்கம்:ஒத்தை வீடு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 135 இப்போது பல சினிமாக் கவிஞர்கள் காரோடும், பேரோடும் இருப்பதை அறிவான். ஆனாலும், எழுத்தாளர் கோடி காட்டிய கவிஞர்களில் பலர் காதல் சுவை சொட்டச் சொட்ட எழுதவில்லை. "காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும்தானே மிச்சம்” என்ற பட்டுக்கோட்டையார் பாடலை இப்படி மாற்றி எழுதலாமா? "கடற்கரை தனித்திருக்கு. கை காலு குறுகுறுக்கு. கடலோரம் போய் கண்ணே. கற்பனையை ஈடேற்ற வா பெண்னே" என்று உல்டாவாக்கலமா...? வா'வுக்கு இருபொருள் கொடுக்கலாமா..? செல்வாவிற்கு, மனசாட்சி உறுத்தியது. அதோடு கவிதா, அவன், தன்னை பற்றி புதுக் கவிதையில் வர்ணிக்க வேண்டும் என்றாள். மரபுக் கவிதை கூடவே கூடாது என்று ஆணையிட்டாள். இவன், இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கேட்டபோது, செல்வம் என்றால் மரபு செல்வா என்றால் புதுக்கவிதை' என்று ஒரு ஆசிரியை போல் அச்சுறுத்திச் சொன்னாள். அவ்வப்போது பத்திரிகைகளில் புதுக்கவிதைகளை படித்து அனுபவத்தில், 'இம்புட்டுதானா என்கிற அலட்சியத்தோடு, அவளிடம் ஒப்புக் கொண்டான். இப்போதுதான் புரிந்தது அனுபவத்தில் அவள் இடக்கு மடக்கில் மாட்ட வைத்து விட்டாள் என்பது; முதலில் கவிதையாம். அதற்கு பிறகுதான் குறைந்த பட்ச தீண்டலாம். அவளை சந்திக்க வேண்டும் என்றால் புதுக்கவிதையோடு வரவேண்டுமாம். இன்று மாலையில், கடற்கரையில் அவளைச் சந்திப்பதாக ஏற்பாடு. இப்போதோ நள்ளிரவு. சித்தப்பாவின் குழந்தைகள் ஏழு வயது அருணும், மூன்று வயது சுபேதாவும் அவன் படுக்கைக்கு இருபுறமாக படுத்திருக்கிறார்கள். குறட்டைக்கூட விடுகிறார்கள். அந்த குறட்டை அளவிற்குக்கூட கவிதை வரவில்லை. ஒருவரி கிடக்கட்டும், ஒரு வார்த்தைகூட வரவில்லை. இதற்குள் சித்திக்காரி பாத் ரூமுக்கு போய்விட்டு வந்தாளோ என்னமோ, விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு ஷாக் அடிப்பது மாதிரி கத்தினாள். "இப்படி விளக்கெரிஞ்சா கரண்ட் பில் யார் கொடுக்கிறது? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்? பெரிய படிப்பு படிக்காராம். பொல்லாத படிப்பு. லைட் ஆப் பண்ணுடா! குழந்தைங்க தூக்கம் கெடும் என்கிற எண்ணமாவது வேண்டாம்? அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரியில குடை பிடிப்பானாம். தூங்குற ராத்திரியிலுமா லைட்டு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/135&oldid=762189" இலிருந்து மீள்விக்கப்பட்டது