பக்கம்:ஒத்தை வீடு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 புதைமண் சொன்னது என் சிஸ்டர் கவிதாதானே. நேரா உண்மைக்கு வரவேண்டியது தானடா..." செல்வா, தலை குனிந்தபடியே, மோகனனுக்கு முகம் காட்டாமல் கிடந்தான் போதாக்குறைக்கு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் இடது பக்க சட்டைப் பையை வலது கையால் மூடினான் அது துருத்திக் கொண்டிருப்பதை ஏற்கெனவே கவனித்த மோகனன், அவனை உச்சி முதல் பாதம் வரை பார்த்தான். மானசீகமாக பருகினான் மோப்பக் குழையும் அனிச்ச முகம். நாட்டுக் கட்டை உடம்பு என்றாலும் அதில் ஒரு நளினம். மன்மதனின் மனைவியான ரதியக்கா தன்னைப்போல் ஒரு மனிதச் சதையை செதுக்கியது போன்ற தோரணை, கருப்பும் மின்னும் என்பதுபோல் காட்டிய உடம்பில் சந்தனக் குழைவு. "இரண்டுக்கும் பயன்படுவான்.” இப்போது, மோகனனின் புன்னகை போலித்தனமான கோபமானது. நாட்டியக்காரன் என்பதால் கண்கள் உருண்டு திரண்டு ஒரே நிலையில் நின்றன. "கவிதாவை பார்க்கத்தானே வந்தே?" "ஆமாம் ஸார். இனிமேல் இந்தப் பக்கம் வரமாட்டேன் ஸார்" "நான் காதலுக்கு எதிரியில்லை மச்சி. பையில இருக்கிற அந்த லவ் லெட்டரை எடு . எனக்குத் டமிழ்ன்னா உயிரு. அதோட ஒன்னை மாதிரி காலேஜ் பசங்களோட டமில் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்." "லவ் லெட்டர் இல்ல ஸார். ஆவின் கார்டு ஸார்." "எனக்கு காதுல பூ வச்சு பழக்கமே தவிர, வைக்க விடுறதில்ல. மரியாதையா கையில இருக்கிறத நீட்டு. இல்லன்னா போலீஸுக்கு போன் பண்ண வேண்டியது வரும். ஒரு மைனர் பெண்ணை கடத்த வந்த குற்றத்திற்கு, போலீஸ்ல லத்தியால லொத்து லொத்துன்னு வாங்குவாங்க, ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீசர் மகன் போலீஸுக்கு போன் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? கம்பி எண்ணனுமா. லெட்டர தாரீயா." "லவ் லெட்டர்தான் ஸார். கவிதாவுக்குத் தெரியாமல் நானே எழுதின டர்டி லெட்டர் ஸார்.” "டர்டின்னு சொல்லாத மச்சி. ஸ்வீட் நத்திங்ஸுன்னு சொல்லு. நான் காதலுக்கு எதிரியில்லை அதை ஆதரிப்பவன். நீ எப்போ என் தங்கைய லவ் பண்றதா தெரிஞ்சிதோ, அப்பவே, நான் ஒனக்கு மச்சான். நீ எனக்கு மச்சி. சரி லெட்டரை எடு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/162&oldid=762219" இலிருந்து மீள்விக்கப்பட்டது