பக்கம்:ஒத்தை வீடு.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 171 "கொஞ்சமா தின்னாத்தானே..? வயிறு முட்ட சாப்பிடலாம். வாய் முட்ட சாப்பிட்டால், இப்படித்தான் வாந்தி வரும். சரி. புறப்படு. பால் கார்டை தேடிப் பார்க்கலாம்." செல்வா, தெருவில் அப்படியே உட்கார்ந்தான். திக்கித் திக்கி பதிலளித்தான். "என்னால ஒரு அடிகூட நகர முடியல... நீங்க போய் தேடிப்பாருங்க சித்தி." "எல்லாம் என் தலைவிதி. வேலியில போற ஒணானை பிடிச்சு காதுல விட்ட கதை" சித்திக்காரி, அந்த மூலை முடுக்கு முட்புதர் பக்கம் ஓடினாள். இதற்குள் அந்த தெருவாசிகளில் ஒரு சிலர் வழியில் வாந்தி சாட்சியாக உட்கார்ந்திருந்த செல்வாவை கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டுபோய் வீட்டில் விட்டார்கள். அருணும், சுபேதாவும் அவனை ஒடி வந்து பிடித்துக் கொண்டார்கள். இந்த இரண்டு பிள்ளைகளையும் இடுப்போடு சேர்த்து அணைத்தபடியே அறைக்குள் போனான். கட்டிலில் குப்புறப் படுத்தான். குழந்தைகள் அண்ணா. அண்ணா. என்று அவனை உசுப்பின. அவன், கண்களை மூடிக்கொண்டு, ஒரு அனுமானத்துடன் அந்த பிள்ளைகளை இருபுறமும் இணைத்துக் கொண்டு கேவிக்கேவி அழுதான் குமைந்து குமைந்து புகைந்தான். பிறகு, ஆவேசமாக எழுந்து பேஸ்டை பிரஷ்ஷில் தடவி, பற்களில் தேய்த்தான். உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் தேய்த்தான். வாஷ்பேஷன் தண்ணிரை வாய்க்குள் ஊற்றி தொண்டைக் குழி வரைக்கும் செலுத்தி, கவளம் கவளமாய் துப்பினான். தன் பக்கமாய் ஓடி வந்த பிள்ளைகளை அனைத்துக் கொண்டே கட்டிலில் மல்லாக்க விழுந்தான். மோகனன் பயன்படுத்திய வாயை கழுவியாயிற்று. வயிற்றை கழுவியாயிற்று. பின் பக்கத்தை கழுவியாயிற்று. ஆனால், மனதை எப்படி கழுவுவது? இது விபத்து என்று விட்டு விடுவதா? அல்லது சித்தியிடம் சொல்லி புலம்புவதா? சித்தப்பா பஞ்சும் இரும்பும் கலந்து செய்யப்பட்ட மனசுக்காரர். அலுவலகப் போராளி. விவகாரம் தெரிந்தால், அந்த மோகனன் பயலை, கை காலை எடுத்து விடுவார். இல்லயைானால் காவல் துறைக்குப் போவார். விசாரணை, அடிதடி என்று எல்லாமே வெளிப்படும். கவிதா வெளிப்படுவாள். இவன் வெளிப்படுவான். ஏற்கெனவே தாழ்ந்து போன தந்தையின் தலை கழுத்துக்குக் கீழே போகும். சித்தப்பாவின் பாசமே பாதகமாகும். ராம லட்சுமணரான அண்ணன் தம்பிகளுக்குக்கூட மனஸ்தாபம் ஏற்படலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/171&oldid=762229" இலிருந்து மீள்விக்கப்பட்டது